பக்கம் எண் :

1240தணிகைப் புராணம்

அச்சந்தரும் பெரிய தோளையுடைய அவனது மெய்யிற் றோய்ந்தமைக்குப் பொருந்த நந்தோழிக்கு இப்பொழுது தான் வேண்டும் பொழுது அரிய மழையை வருவித்து உலகினைப் பாதுகாத்தல் எளிதாயிற்று.

(வி - ம்.) கற்புக் கடம்பூண்டனள் என்பது கருத்து. கற்புடை மகளிர் பெய்யென மழை பெய்யும் என்பதுபற்றி இங்ஙனம் கூறினள்.

(591)

கற்புக் கேட்ட கழிமகிழ் கிளர
அற்புச் செவிலி யகன்றமை யழுங்கல்
(செவிலி கூற்று)

 வண்டலம் பாவை வரிமணற் றைத்து வளாய்ப்பயிலும்
 பண்டலங் காரநம் பாவைதன் பாவைக் கெனவடுத்துக்
 கண்டலம் போது கொளக்கொடுத் தார்க்குக்கைம் மாறுதவல்
 விண்டலம் பாற்றவற் றோவினி யென்னோ விளம்புவதே.

(இ - ள்.) பண்டு வரித்த மணலின்கண் விளையாட்டுப் பாவை யியற்றி விளையாடாநின்ற அழகிய நம்மகளை அணுகி நின் பாவைக்கு அணிவாயாக வென்று தாழை மலரினை ஏற்றுக்கொள்ளும்படி வழங்கியவருக்குக் கைமாறாக உதவுதற்கு விண்ணுலகம் போதியதாக வல்லதோ இனி யாம் கூறுதற் கியாதுளது.

(வி - ம்.) பாற்றவற்றோ? - பற்றவற்றோ : விகாரம். பற்றுதல் - போதியதாதல். கண்டலம்போது கொடுத்தார் என்றது, மகட்குக் கொழுநன் ஆனவர் என்றவாறு. இது மகள் கற்புக் கடம்பூண்டமைக்குக் கழிமகிழ் கொண்டு கூறியவாறு.

(592)

மின்னிலை நினைஇ யின்னலிற் றுளைதல்
இதுவுமது

 பன்னா ளயன்மை பயின்றே யிருந்ததும் பண்புமிகச்
 சின்னா ளணிமை திகழ்ந்தே யிருந்ததுந் தீவினையேன்
 முன்னா மதித்தறிந் தாற்றணி காசல முன்னலர்போல்
 இன்னா நெறியு மியங்குங்கொ லோவிட் டிடைக்கிளியே.

(இ - ள்.) சிற்றிடையினையும் கிளிபோலும் மழலை மொழியினையும் உடைய என் மகள் பலவாகிய நாட்கள் அன்பில்லாதாள் போன்று ஏதின்மை காட்டிப் பயின்று வந்ததனையும் பின்னர்ச் சில நாள் அன்புப் பண்பு மிக்காள் போன்று இனிமை விளங்கப் பயின்று வந்ததனையும் தீவினையாட்டியேன் நினைந்து ஆராய்ந்தறிந்தேனாயின், இக்காலம் திருத்தணிகைமலையை நினையாதவர் செல்லுங்கொடு நெறியையொத்துத் துன்பந்தரும் இப்பாலை நெறிக்கண் அவள் செல்ல நேருமோ? நேர்ந்திரா தன்றே!

(வி - ம்.) இட்டிடை - சிறிய இடை. அயன்மை - அன்பிலாமை. முன்னா - முன்னி, முற்படவே எனினுமாம்.

(593)