| உள்ளிப் பணைப்பெருந் தோளிசென் றாளுயங் குங்கலைகள் | | துள்ளிப் பெயருஞ் சுரங்கண்ட துண்டெனிற் சொல்லுகவே. |
(இ - ள்.) வெள்ளி மலையின்கண் வீழும் அருவித்திரள் போன்று வெள்ளிய என்புப் பொடியாகிய திருநீற்றினை அள்ளிப் பூசிய மார்பினை யுடைய மாவிரதியரே நீர்பெறாது வருந்துமான்கள் (பேய்த் தேரைக் கண்டு) துள்ளியோடாநின்ற இப்பாலையின்கண் தமரைப் புறக்கணித்துத் தன் காதலன் ஆகிய அயலான் துணையே சிறந்தது என்று கருதி அவனோடு சென்ற மூங்கில்போன்ற பெரிய தோளினையுடையாள் ஒருத்தியைக் கண்டதுண்டோ கண்டனிராயிற் கூறுக! (வி - ம்.) மாவிரதியர் - அகச்சமய மாறனுள் ஒரு சமயத்தினர். என்புப் பொடி எனற்பாலது தளைநோக்கி இயல்பாயிற்று. துணையே என்புழி - தமர்துணையைப் பிரித்தபின். ஏகாரம் - பிரிநிலை. (610) துறவியரடுப்ப வுறுபவள் வினாதல் (இதுவுமது) | உரகத்து நாடு தபுத்துவெய் யோன்கிர ணத்தொழுங்கும் | | நரகத்து நாட விடர்கொளு நாமவெங் கானமங்கைக் | | கரகத்து நீர்கரப் பத்தண்டு கீறக் கடத்திரர | | கரகத்து நூபுரப் பாவையொ டண்ணலைக் கண்டனிரே. |
(இ - ள்.) ஞாயிற்றின் கதிரொழுங்கு நாகலோகத்தை நீங்கி அதன்கீழுள்ள நரகத்தினுஞ் செல்லும்படி வெடிப்புக் கொள்ளாநின்ற அச்சந்தரும் வெவ்விய இப்பாலைக் காட்டினை, (இவ்வெப்பத்திற் கஞ்சி) நுங்கையின் கண்ணுள்ள கரகத்தினூடே நீரும் ஒளிப்ப நுந்தண்டும் தரையிற் கீறாநிற்பக் கடவா நின்றனிர் ; சிவ! சிவ! சிவ! நும்முன் ஆரவாரிக்கும் நூபுரமணிந்த பாவையொருத்தியொடு அண்ணல் ஒருவன் போதக் கண்டனிரோ? கூறியருள்க! (வி - ம்.) உரகத்துநாடு - நாகலோகம். விடர்வழிச் சென்று நரகத்தே நண்ணும் என்றவாறு. விடர் - வெடிப்பு. நாமம் - அச்சம். அரகர - சிவசிவ. இஃது அவர்க்கிரங்கிக் கூறியவாறு. கத்தும் - ஆரவாரிக்கும். (611) நீத்தார் உலகி னிகழ்ச்சி கூறல் (சான்றோர் கூற்று) | சேயிடைக் கண்டனஞ் செல்வியைச் செல்வனைத் தேமொழியாய் | | போயிடைக் கண்டு பெயர்வரி தாகும் புணரியெனும் | | தாயிடைக் கண்டசெந் தாமரை மாது தனைவிசும்பின் | | ஆயிடைக் கண்டனர் மாதவத் தாரந்த மாயனொடே. |
(இ - ள்.) இனிய மொழியையுடைய நங்காய்! நீ கூறும் நங்கையையும் நம்பியையும் இவணின்றும் தூரிய விடத்தேயே யாங்கள் கண்டேம். நீ அவ்விடத்திற்குப் போய் அவர்களைக் கண்டு மீளல் இயலாதாம். |