மேலும் திருப்பாற் கடலாகிய தாய் ஈன்ற திருமகளைப் பெரிய தவத்தினையுடைய துறவோர் வைகுந்தத்தே திருமாலோடு வீற்றிருக்கக் கண்டனரே யல்லரோ. (வி - ம்.) அங்ஙனம் உலகிய லிருத்தலான் நீ அவர்களைத் தேடிச் சேறல் பயனில் செயல் என்பது குறிப்பு. (612) இருவர் வரவி னேசற வெய்தி விரிமனச் செவிலி வேசற வெய்தல் (செவிலி தன்னுட் கூறியது) | உருமின மார்த்துத் திசைதிசை பாயு மொளிப்பிழம்பாய் | | வருமினல் காட்டு மழைகண்டு வேட்ட மயில்விளர்ப்பப் | | பொருமின வாறு புணர்ந்தெதிர் வாரைப் புணர்ந்துசென்றோர் | | திருமின ராலென்றென் றெண்ணியல் லாந்ததென் சிந்தனையே. |
(இ - ள்.) என்னெஞ்சம், இடித்திரள் ஆரவாரித்துத் திசைதோறும் பாயாநின்ற ஒளிப்பிழம்பாக வருகின்ற மின்னலைக் காட்டா நின்ற முகிலைக் கண்டு விரும்பிய மயில் அம்முகில் வெளிறிப் போயினமை யானே ஏங்கினாற்போன்று ஏதிலாரிருவர் தம்முட் கூடி வருவோரைத் தூரத்தே கண்டு என் மகளும் அவள் கொழுநனும் மீண்டு வருகின்றனர். என்று நினைத்துப் பின் (அயலாரானமை கண்டு) துன்புற்றுச் சுழலானின்றது. (வி - ம்.) உரும் - இடி. மினல் - மின்னல். மழை - முகில். திருமினர் - மீண்டனர். அல்லாந்தது - சுழன்றது. சிந்தனை : ஆகுபெயர் - நெஞ்சம். (613) தெருள்கிலள் வினாவ விருவருங் கிளத்தல (இருவர் - எதிரே வந்த ஏதிலாராகிய கிழவனுங் கிழத்தியும்) | செந்திரு வேசெங்கண் மாயவ னேநும்மிற் சேர்ந்தபண்பின் | | முந்திரு வோர்செலக் கண்டனி ரேமொய்ம்பு ளாரையிவர் | | அந்திலை வேல்வலத் தாரென்று காட்டின ரன்னைமின்னை | | இந்திர னார்மக ளாமென்று காட்டின ளீங்கிவளே. |
(இ - ள்.) திருமகளே! சிவந்த கண்ணையுடைய திருமாலே நும்மைப் போன்று நெஞ்சமொன்றுபட்ட பண்பினை யுடையராய் நுமக்கெதிரே இருவர் செல்லக் கண்டீரோ! (என்று வினவ அவருள் தலைவி செவிலியை நோக்கி) அன்னாய்! (கண்டேம்) இவர் வலிமையுடைய அந்நம்பியை இவர்தாம் வேலானே வெற்றியை யுடைய செவ்வேள் போலும் என்று கூறி எனக்குக் காட்டினர். (என்றாளாக ; அந் நம்பி செவிலியை நோக்கி) அன்னாய்! மின்போன்ற அந்நங்கையை இவள் தாம் இந்திரன் மகளாகிய தேவசேனை போலும் என்று கூறி எனக்குக் காட்டினள் (என்றான்.) |