பக்கம் எண் :

1250தணிகைப் புராணம்

(வி - ம்.) அந்திலை வேலென்புழி. அந்தில் என்னு மசைச்சொல் ஈற்றுயிரும் மெய்யுஞ் செய்யுள் விகாரத்தாற் றொக்கன.

(614)

கண்ட வெல்லை கடாவக் கூறல்
(செவிலி வினாவும் அத் தலைவன் தலைவி விடையும்)

 வருந்தினண் மாதென மாழ்கும்வள் ளாலின்று மாறிலின்பம்
 பொருந்தினம் யாமெனும் பூங்குயி லேயெங்கு போதக்கண்டீர்
 பருந்தின மார்சுர நீந்தித் தணிகைப் பறம்பணிக்கண்
 திருந்திய காட்சியர்க் கண்டா மினியங்குச் சேர்ந்தவரே.

(இ - ள்.) இந் நங்கை பெரிதும் நடைவருத்தமுற்றாள் என்று வருந்தாநின்ற வள்ளலே! ஒப்பற்ற பேரின்பத்தை யாங்கள் பொருந்தினேம் என்று உள்ளமுவக்கும் அழகிய குயில்மொழி நங்கையே! அவ்விருவரையும் நீவிர் யாண்டுச் செல்லக் கண்டீர் கூறுமின்! (என்று செவிலி வினவ அவ்விருவரும்) அன்னாய்! திருத்தமுடைய தோற்றத்தையுடைய அவ்விருவரையும் யாங்கள் பருந்துத்திரள் நிரம்பிய இப்பாலை நிலத்தைக் கடந்து திருத்தணிகை மலையின் அணித்தாகிய இடத்தே செல்லுங்காற் கண்டேம் ; இப்பொழுது அந்நகரத்தை யடைந்தவரே
யாகி யிருப்பர்காண்.

(வி - ம்.) பறம்பு - மலை. இனி - இப்பொழுது.

(615)

கவலைச் செவிலியைக் கண்டவர் தெருட்டல
(கண்டோர் கூற்று)

 நன்னீர் நறும்பழ னத்திடைப் பூத்த நளினமெனத்
 தொன்னீர் மையிற்றிரி யாண்முகஞ் சீர்த்துத் துணைவனொடு
 முன்னீர் மிகுந்தணி கைப்பதிக் கேகுறு மொய்குழற்கே
 இந்நீர் மையினன்னை வாடுவ தெண்ண மிலாரெனவே.

(இ - ள்.) அன்னையே! கருத்திலாதார் போன்று, நல்ல நீர் மிக்க நறிய கழனியிற் பூத்த செந்தாமரை மலர்போன்று தனது பழைய பண்பிற் பிறழாத செல்வி முகம் சிறந்து விளங்காநிற்பத் தன் காதலனோடு முவ்வகை நீர்வளமு மிக்க திருத்தணிகை நகர்க்குச் சென்றவட் பொருட்டோ இத்தகைய துன்பத்தோடு நீ வாடுதல்.

(வி - ம்.) அன்னை! முகஞ்சீர்த்துத் துணைவனொடு தணிகை சென்ற மொய்குழற்கோ நீ இவ்வாறு வாடுவது? வாடுவது என்பது வினா. அந் நிகழ்ச்சி மகிழ்தற்குரியதாம் என்பது குறிப்பு. எண்ணமிலார் - அறிவிலார்.

(616)

ஒண்டொடிச் செவிலியைக் கண்டவர் மீட்டல்
(இதுவுமது)

 ஊளைப் பெருநரி வௌவிய வூனை யுறவெறிந்து
 வீளைப் பருந்துணும் வெஞ்சுர நண்பகன் மேவினன்னாய்