பக்கம் எண் :

களவுப் படலம்1251

 பூளைப் பழமலர் தீயினிட் டாங்கடி பொன்றுமவர்
 வாளைப் பழனஞ்சென் றார்பய னில்லை வருந்தினுமே.

(இ - ள்.) அன்னாய்! அத்தலைவனுந் தலைவியும் வாளைமீன்கள் வாழும் மருதநிலத்தை யெய்தினர்; நீ ஊளையிடாநின்ற பெரிய நரி கவர்ந்த ஊனினைச் சீழ்க்கையையுடைய பருந்து வீழ்ந்து பறித்துத் தின்றற்கிடமான வெப்பமிக்க இப்பாலை நிலத்தின்கண் இந் நடுப்பகலிலே செல்வாயெனின் நினது அடி பூளையினது பழைய மலரினைத் தீயினிட்டாற் போன்று தீந்து போதலேயன்றி நீ வருந்துவதனால் ஏதும் பயனில்லையாம்.

(வி - ம்.) ஆதலால் மீண்டு போ! என்பது குறிப்பு. ஊளை - நரி செய்யும் ஒலி. வீளை - சீழ்க்கை; பருந்து சீழ்க்கையிடும். பழமலர் - வாடிய மலர். பொன்றும் என்றது - வருத்தத்தின் மேனின்றது.

(617)

வேட்டவுள்ள மீட்டவண் மீட்டல்
(செவிலி தன்னுட் கூறியது)

 சிவனத்த னீன்றருள் சேயையுன் னாரென்னத் தேம்புளமே
 புவனத்தின் யாப்பெவ ரேதடுப் பார்நம் புனக்கிளியை
 அவனத்த நீந்தி யழகார் தணிகை யடுத்துவிட்டான்
 பவனத்தின் வேகங்கொண் டேபடர்ந் தாலும் பயனில்லையே.

(இ - ள்.) பரமசிவனாகிய இறைவன் ஈன்றருளிய முருகவேளை நினையாத மடவோர் போன்று வருந்தாநின்ற நெஞ்சமே உலகத்தின் கண் ஊழ் நிகழ்ச்சியை யாரே தடுக்க வல்லுநர், அத்தலைவன் நமது புனக்கிளிபோலும் செல்வியை உடன்கொண்டு இப்பாலையைக் கடந்து அழகு பொருந்திய திருத்தணிகையை எய்திவிட்டனன்காண்; இனி யாம் காற்றுப் போன்று விரைந்து சென்றாலும் ஏதும் பயனில்லை.

(வி - ம்.) சிவனாகிய அத்தன் என்க. சேய் - முருகவேள். யாப்பு - ஊழ். பழம் பிறப்பிலே கட்டுண்ட வினையாகலின் ஊழினை யாப்பென்றார். புனம் - காடு. பவனம் - காற்று. ஆதலால் இனி யாம் மீள்வேம் என்பது குறிப்பு.

(618)

சேணிடையகற்சி செவிலிதாய்க் குணர்த்தல்

 மணிகா சலமரு மல்குனல் லாய்நின் வளர்முலைகட்
 கணிகா சலமத னம்புகள் பாறவென் றாதரவின்
 கணிகா சலமெனக் கற்றவர் வைகுங் கவினடுத்த
 தணிகா சலங்கொண்டு சார்ந்தனன் றோழிநந் தையலையே.

(இ - ள்.) தோழி! அத்தலைவன் நம்மகளை "மணிகளும் பொற் காசுகளும் குலுங்காநின்ற அல்குலையுடையோயே! ஆ! வஞ்சமுடைய காமன் அம்புகள் (வருத்தாது) அகலும்பொருட்டு நினது வளராநின்ற முலைகளுக்கு ஒப்பனை செய்வேன் என்று அன்புமொழி கூறி விருப்பத்தோடு, கணிகாசலம் என்று கூறப்படும் கற்றவர் உறைகின்ற அழகுடைய தணிகை மலையை உடன்கொண்டு சென்று எய்தினன்.