பக்கம் எண் :

1252தணிகைப் புராணம்

(வி - ம்.) காசு - பொற்காசு. அணிகு - அணிவேன். ஆ : இரக்கக் குறிப்பு. சலம் - வஞ்சம். பாற - நீங்க. கணிகாசலம் - தணிகைக்கு மற்றொரு பெயர். கவின் - அழகு. தோழி என்றது நற்றாயை.

(619)

வற்றா விழைவி னற்றாய் கிளத்தல்
(நற்றாய் செவிலிக்குக் கூறியது)

 இணங்குவ தின்றி வளர்முலை யாளெழில் காணவென்கண்
 அணங்குவ தாயிழை மென்மொழி கேட்ப வகஞ்செவிகள்
 பிணங்குவ பேதையை யாரத் தழுவிப் பெயர்த்தெடுப்ப
 உணங்குவ தோளினி யென்செய லாவ தொளிநுதலே.

(இ - ள்.) ஒளிபொருந்திய நெற்றியினையுடையோய்! என் கண் ஆராய்ந்த அணிகலனையுடைய நம்மகளின் அழகினைக் காண்டற் கவாவிப் பெரிதும் வருந்துவதாயிற்று. என்னுடைய உட்செவிகள் அவளுடைய மெல்லிய இன்சொற்களைக் கேட்டற் கவாவி வருந்தா நின்றன. என் தோள்கள் அப்பேதையினை இறுகத் தழுவித் தூக்கி யெடுத்தற் கவாவி வருந்துகின்றன. இவற்றின் திறத்தே இனி யான் செய்யக்கடவதியாது? ஒன்று முணர்கிலேன் காண்!

(வி - ம்.) ஒன்று முணர்கிலேன் என்பது குறிப்பு. அகஞ்செவி - உட்செவி, ஆயிழை பேதை என்பன சுட்டு மாத்திரை.

(620)

வேறு

 தாயு மாயமுந் தளர்வுறத் தளர்ந்தழுஞ் செவிலி
 காயும் வெஞ்சுர நேடினள் காணலண் மீள
 ஆயு ளத்தெழு மல்லலை யறிந்துதன் னையர்கள்
 ஏயி ருப்பதே யெழுகநம் மினமெலா மென்றார்.

(இ - ள்.) நற்றாயும் தோழியரும் இவ்வாறு மனந்தளராநிற்ப நெஞ்சுந்தளர்ந்து அழாநின்ற செவிலியும் வெதுப்புகின்ற வெவ்விய பாலைக்கட் சென்று தேடிக்காணாதவளாய் மீளாநிற்பத் தமையன்மார் நற்றாயின் நெஞ்சத்தே எழாநின்ற துயரத்தையுணர்ந்து ஏ! ஏ! யாம் ஈண்டு வாளாவிருப்பதே நம்மினத்தாரெல்லாம் ஒரு சேர எழுக என்று கூறினர்.

(வி - ம்.) காயும் - சுடும். நேடினள் - முற்றெச்சம் : தன்னையர் - தமையன்மார். எழுகம் எனினுமாம். ஆய் - தாய். ஏ - இகழ்ச்சிக் குறிப்பு.

(621)

 வில்லெ டுத்தனர் வாளிக டெரிந்தனர் வீரச்
 சொல்லெ டுத்தன ரினமெலாந் துவன்றினர் சூழக்
 கல்லெ டுத்ததங் குடியுளார் பெயர்தெரி கானம்
 பல்லெ டுத்தபேய் தொடர்தரப் பரந்தனர் படர்ந்தார்.