| விலக்கத் தண்முறா விறற்கணப் படைஞரு மெவரும் | | நலக்கத் துன்றினர் நாயகன் கழலிணை தாழ்ந்தார். |
(இ - ள்.) எம்பெருமான் திருத்தணிகை மலையினை எய்திய வளவிலே நூறாயிரத்தொன்பதின்மராகிய வீரரும் போரினைப் பொருளாக மதியாத வலிமைமிக்க படைத்தலைவரும் பகைவர் சோர்வின்கண் அவரை யணுகாத வெற்றியையுடைய சிவகணப்படைஞரும் இன்னோரன்ன பிறர் யாவரும் நலம்பெறற் பொருட்டு வந்தனர். பெருமான் திருவடிகளை வணங்கினர். (வி - ம்.) இலக்கம் - நூறாயிரம். இகல் - போர். எறுழ் - வலிமை. விறல் - வெற்றி; வலிமையுமாம். (640) | அருட்க டைக்கணா லவரவர்க் கமைவர நோக்கி | | உருக்கி ளர்ந்தகோ புரமணி வாய்தலுட் புக்குத் | | திருக்கி ளர்ந்தபொற் கோயிலுட் சென்றனன் செல்வன் | | வெருக்கி ளர்ந்தமான் விழிபொரும் விழியவ ளோடும். |
(இ - ள்.) திருவருட் செல்வனாகிய முருகப்பெருமான் அவ்வமரரைப் பொது நோக்கானன்றி வரிசையாற் கடைக்கண்ணால் நோக்கிப் பின் அழகுமிக்க கோபுரத்தையுடைய அழகிய வாயிலிற் புகுந்து வெருட்சிமிக்க மானினது விழிபோன்ற விழிகளையுடைய வள்ளி நாயகியாரோடு செல்வமிக்க பொன் கோயிலினகத்தே சென்றருளினன். (வி - ம்.) அமைவர - அமைதியுண்டாகும்படி. உரு - அழகு. வாய்தல் - வாயில். வெரு - வெருட்சி. (641) | வேங்கை யானதும் விருத்தனாய்த் தொடர்ந்ததும் வேழம் | | ஆங்க ழைத்தது மாகிய விம்மித மெல்லாம் | | பூங்க ணாயிவட் போதர வன்றுகொ லென்னா | | ஓங்க னாயக னளவளா யுடங்குவீற் றிருந்தான். |
(இ - ள்.) தாமரை மலர் போன்ற கண்ணையுடையோய்! யான் வேங்கை மரமானதும் முதியவனாகி நின்னைப் பின் தொடர்ந்ததும் யானை அழைத்ததுமாகிய நினக்கு மருட்கை விளைத்த செயலனைத்தும் யாம் இங்கே வருதற் பொருட்டன்றோ என்று கூறி மலைநிலத்துத் தெய்வமாகிய முருகவேள் அவளோடு அளவளாவி இனிதே வீற்றிருந்தருளினன். (வி - ம்.) வேங்கை - ஒரு மரம். விம்மிதம் - மருட்கை. போதர - வர. உடங்கு - ஒருங்கு. (642) | அரண மாகிய பிரணவப் பொருணக ரடுக்கல் | | முரண வாவிய முரிசிலை வேடர்தங் கொடியை | | இரண வேலினான் களவுகொண் டெய்திய துரைத்தாம் | | கரண மோடவன் கடியயர்ந் தமையினிக் கரைவாம். |
|