பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1261

வள்ளிநாயகி திருமணப் படலம்


 காக்குங் கடவுள் கரந்து சிலம்பனாய்
 வாக்குங் கரக மணிநீர் கரத்தேற்றுப்
 பூக்கும் பொலங்கொம் பனையாட் கருளின்பம்
 தேக்குந் தணிகைச் சிலம்பற் றொழப்பெற்றேன்
 சீந்தும் வினையுஞ் செருக்கும் விடைகொண்ட
 ஏந்த லறிவி னெனதறிவு மாய்ந்ததே.

(இ - ள்.) திருமால் தன்னுருவினை மறைத்துக்கொண்டு குறவர் வேந்தனாகி ஒழுக்கிய கரகத்தின் அழகிய நீரினைத் தன்றிருக்கையிலே ஏற்றருளி மலர்கின்றதொரு பொன்மயமான பூங்கொடியை ஒத்த வள்ளிநாயகியார்க்குத் தனது திருவருளின்பத்தை நிரப்பிய திருத்தணிகை மலைப் பெருமானைத் தொழும்பேறு பெற்றேன்; அவ்வளவில், என்னைச் சினந்து வருத்தும் வினையும், செருக்குகளும் என்பால் விடை பெற்றுப் போயின; என்னுடைய சிற்றறிவு அப்பெருமானுடைய பேரறிவின்கண் முழுகி மாய்ந்தது.

(வி - ம்.) காக்குங்கடவுள் - திருமால். மணிநீர் - உவமத் தொகையுமாம். பொலம் - பொன். சீந்தும் - சினக்கும். செருக்கு - யான் எனதென்னும் இருவகைப் பற்று. ஏந்தலறிவு - இறைஞானம், எனதறிவு - உயிரறிவு.

(1)

 திருவிளங்குந் தணிகைவரை வீற்றிருக்குஞ்
           சேயிலைவேற் செவ்வேள் சென்று
 மருவிளங்கு மணிக்கூந்தற் கானவர்தங்
           குலக்கொடியை வௌவி மீண்ட
 துருவிளங்குங் கயிலாயத் திறையவனார்
           மதித்தருளி யுமையா ளோடும்
 குருவிளங்குங் குமாரலிங்கத் திடைநின்று
           மாங்குவெளிக் கொண்டா ரன்றே.

(இ - ள்.) அழகுதிகழா நின்ற கயிலைமலைக் கடவுளாகிய சிவ பெருமான் செல்வங்கொழித்துத் திகழா நின்ற திருத்தணிகை மலைமிசை வீற்றிருக்குஞ் சிவந்த இலையினையுடைய வேலேந்திய செவ்வேள் சென்று மணங்கமழ்ந்து திகழாநின்ற நீலமணி போன்ற நிறமுடைய கூந்தலையுடைய குறமகளாரைக் கவர்ந்து வந்தமையை உணர்ந்தருளி, நிறந்திகழா நின்ற குமாரலிங்கமாகிய அருட்குறியினின்றும் இறைவியாரோடு வெளிப்பட்டருளினன்.

(வி - ம்.) மணி - நீலமணி. கானவர் - குறவர். உரு - அழகு. குரு - நிறம். ஆங்கு : அசை.

(2)