பக்கம் எண் :

1262தணிகைப் புராணம்

 பூதகணம் புடைசூழப் பொழிகதிர்ப்பன்
           மணித்தவிசிற் பூவை யோடும்
 சோதிமணி மண்டபத்திற் றந்தையார்
           வீற்றிருப்பச் சுடர்வே னம்பி
 காதலின்வல் விரைந்தடுத்துக் கழல்பணிய
           வணைத்திருவிக் கருணை கூர்ந்து
 சீதமதி நகைமுகிழ்த்துத் திருமணங்கா
           ணுதற்கீங்குச் சென்றா மென்றார்.

(இ - ள்.) பூத கணங்கள் புடைசூழா நிற்ப ஒளிவீசா நின்ற பலவாகிய மணிகளாலியன்ற அரியணையின்மேல் உமையம்மையாரோடும் ஒளியுடைய மணி மண்டபத்தின்கண் இறைவனார் வீற்றிருந்த வளவிலே ஒளிரும் வேலை யேந்திய முருகவேள் அன்போடு மிகவும் விரைந்து சென்று அணுகி அவருடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்க, அவ்விறைவனார் திருக்கைகளானே அணைத்துப் பக்கத்தே இருத்தி அருண்மிக்குக் குளிர்ந்த திங்கள் போன்ற திருமுகமலர்ந்து புன்முறுவல் பூத்துச் செல்வனே நின்னுடைய திருமண வினையைக்கண்டு களித்தற் கிங்கே வந்துள்ளேம் என்று திருவாய் மலர்ந்தருளினர்.

(வி - ம்.) பூவை - உமை. சீதம் - குளிர்.

(3)

 உருகியசிந் தையினோடும் பெருங்கருணைத்
           திறநோக்கி யுரையா டாது
 பருகுகளி வண்டெனப்பன் னிருபுயத்தோ
           னிருந்திடலும் பணிந்து போற்றி
 அருகிருந்த வீணைநரம் புளர்கரத்தோ
           னடியேங்க ளுய்யு மாற்றால்
 பெருகுமகிழ்ச் சியின்மன்றல் கடனன்றோ
           பிஞ்ஞகற்குப் பிறக்க லென்றான்.

(இ - ள்.) அன்பினாலே உருகாநின்ற நெஞ்சத்தோடும் இறைவனுடைய பேரருளின் மாண்பினை நினைந்து விம்மித மடைந்தமையால் வாய் பேசாமல் தேன் பருகும் வண்டுபோல அப்பன்னிருகைப் பெருமான் இருப்பப் பக்கத்திலேயிருந்த நாரதமுனிவன் எழுந்து பரமசிவனை வணங்கி அடியேங்கள் உய்யும் பொருட்டு மிக்க மகிழ்ச்சியோடு இத் திருமணத்தினைச் சிறப்பித்தல் பிஞ்ஞகப் பெருமான் கடமையே யன்றோ என்று விண்ணப்பித்து நின்றனன்.

(வி - ம்.) தேன் பருகு வண்டென்க. வீணை நரம்புளர் கரத்தோன் - நாரதமுனிவன். மன்றலைப் பிறக்கல் என்க. பிறக்கல் - விளக்குதல். சிறப்பித்தல் என்றவாறு. மக்கட்குத் திருமணம் நிகழ்த்துதல் தந்தைக்குக் கடமைதானே
என்றவாறு.

(4)