பெரிய மயிலூர்தியைச் செலுத்திய முருகப்பெருமான் திருமண வினைக்கு ஏற்ற இடமமைந்த மண்டபம் இயற்றத் தொடங்கினன். (வி - ம்.) தாங்குபு - தாங்கி. தடவு - வளைவு. தடவிய - வளைந்த ; வணங்கிய என்றவாறு. இடவிய - இடமான. (9) | ஐம்பெரும் பூதமு மடைவி னின்றெனப் | | பைம்பொனின் வச்சிரம் பதித்து மேலிடம் | | செம்பவ ளத்தின்மேற் செறித்த நீன்மணி | | உம்பர்வெண் பளிங்கொளிர் குறடு ஞற்றினான். |
(இ - ள்.) நில முதலிய ஐம்பெரும் பூதங்களும் நிரல்பட நின்றாற் போன்று பசிய பொன்னின்மேல் வைரமணியைப் பதித்து அதன் மேலிடப்பட்ட சிவந்த பவளத்தின்மேல் அழுத்திய நீல மணியின் உச்சியில் வெண்ணிறத்தாலே ஒளிர்கின்ற பளிக்குக்குறடு அமைத்தனன். (வி - ம்.) பூதம் - நில முதலியன. வச்சிரம் - வைரமணி. நீலமணி - நீல்மணி என நின்றது பளிங்கு - படிகமணி. (10) | ஆயிரந் தூண்வயி டூரி யத்தமைத் | | தேயகோ மேதகத் திணக்கிப் போதிகை | | பாயவுத் திரங்கள்புட் பராகத் தாக்குபு | | மீயுயர் முகடுமா ணிக்கம் வேய்ந்தனன். |
(இ - ள்.) வயிடூரிய மணியால் ஆயிரந்தூண்களை இயற்றி அமைத்துப் பொருந்திய கோமேதக மணியாலியற்றிய போதிகைகளை அவற்றின்மேல் பொருந்தப் பரவிய வுத்திரங்கள் புட்பராகமணியானே இயற்றி மேலே உயர்ந்த முகட்டின்கண் மாணிக்கம் வேய்ந்தான். (வி - ம்.) ஆக்குடி - ஆக்கி. மீ - மேலே. (11) | மரகதக் கொடுங்கைசுற் றமைய வைத்தனன் | | தரளமக் கொடுங்கையிற் றாழ நாற்றினான் | | இரசத யாளிபாங் கிருவித் தேங்கொளி | | பரவுபன் மணியசோ பானம் பாய்த்தினான். |
(இ - ள்.) சூழமரகதமணியாலாய கொடுங்கைகளைப் பொருந்த அமைத்து வைத்தான் ; அக்கொடுங்கையினின்றும் நாலும்படி முத்து மாலைகளைத் தூக்கினான். அவற்றின் பக்கத்தே வெள்ளியாலியன்ற யாளிகளை இருத்திப் புகழப்படுகின்ற பல்வேறு மணிகளழுத்தப்பட்ட படிக்கட்டுகளைச் செருகினன். (வி - ம்.) தரளம் - முத்து. இரசதம் - வெள்ளி. சோபானம் - படி. (12) |