பக்கம் எண் :

1266தணிகைப் புராணம்

 பாற்கடற் பரப்பெலாம் பைம்பொற் றாமரைப்
 பூக்கஞ லிற்றெனப் பொற்ப நாப்பணே
 தேக்கொளித் தவிசுவேற் செம்மற் கிட்டயல்
 ஆக்கினன் றவிசவ ரவர்கட் கேற்பவே.

(இ - ள்.) அம்மண்டபத்தின் நடுவிடத்தே வேலேந்துந் தலைவனாகிய முருகப்பெருமானுக்கெனத் திருப்பாற் கடலிடமெங்கும் பசிய பொன் தாமரை மலர் நெருங்கி மலர்ந்திருந்தாற் போன்று பொலிவுறும் படி ஒளி நிரம்பிய ஓர் இருக்கையினை அமைத்தனன். மேலும் பல்வேறு திறப்பட்ட அமரர் முதலியோர்க்கும் அவரவர் தகுதிக்கேற்ற பல்வேறு இருக்கைகளை அமைத்தான்.

(வி - ம்.) கஞலிற்று - நெருங்கிற்று. பொற்ப - பொலிவுற. செம்மல் - முருகன்.

(13)

 கண்ணடி யெனத்திகழ் காமர் வேதிகை
 ஒண்ணிறம் பலதொகுத் தொளிரு மண்டிலம்
 வண்ணமே கலைபுறம் வயங்கு குண்டமும்
 எண்ணின னியற்றின னிறைவ னூன்முறை.

(இ - ள்.) இறைவனருளிய ஆகமநூன்முறைப்படியே, கண்ணாடி போன்று திகழா நின்ற அழகிய வேள்விமேடையும் ஒளி பொருந்திய நிறம் பலவற்றைக்கூட்டி ஒளிராநின்ற கும்ப மண்டிலங்களும், நிறமுடைய மேகலைகளும் விளங்காநின்ற குண்டமும் ஆராய்ந்து இயற்றா நின்றான்.

(வி - ம்.) கண்ணடி - கண்ணாடி. மண்டிலம் - கும்பம் வைக்கும் வட்டம். மேகலை - குண்டத்தைச் சுற்றியிடும் வளையம்.

(14)

 இந்நுகாந் தக்கலி னிழைத்துப் பித்திகை
 அந்தவார் சுவர்த்தல மடங்க வோவியப்
 பந்திமா மணிகளிற் பயிற்றிப் பாவைகள்
 வந்துலாய்ப் பெயர்தர வயின்றொ றாக்கினான்.

(இ - ள்.) சுவர்கள் சந்திரகாந்தக் கல்லினாலியற்றி அந்த நெடிய சுவர்களெங்கும் சித்திரவரிசைகளை மணிகளாலே அமைத்து வந்தும் உலாவியும் போகாநின்ற பொறிப்பொம்மைகளை வேண்டுமிடமெல்லா மியற்றினன்.

(வி - ம்.) இந்து - திங்கள். பித்திகை - சுவர். பந்தி - வரிசை. பாவை - பொம்மை.

(15)

 உண்டுகொ லில்லைகொ லென்ன வும்பரும்
 நுண்டொழி லுருப்பல நோக்குந் தூண்டொறும