பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1267

 வெண்டுகில் வாருறை வீக்கிக் கம்பலம்
 வண்டல மருத்துகண் மாற விட்டனன்.

(இ - ள்.) தேவர்களும் உண்டோ இல்லையோ என்று ஐயுற்று நோக்குதற்குக் காரணமான நுண்ணிய தொழிலானாய பல்வேறு உருவங்கள் செதுக்கப்பட்ட தூண்தோறும் வெள்ளிய நெடிய துகிலுறைகளைக் கட்டி வண்டுகளைச் சுழலச்செய்யும் பூங்கம்பலங்களை தரைமறைய இட்டனன்.

(வி - ம்.) உம்பரும் : உம்மை உயர்வு சிறப்பு. வண்டுகள் மலரென்று நினைத்து அலமரும் என்க. கண் - தரை.

(16)

 விடுகதிர்ப் பன்மணி வேறு கோத்தகாழ்
 படுகவின் முறைமையிற் பரந்த வுள்ளெலாம்
 நெடுகவும் விலங்கவு நிரைத்துப் பல்கனி
 கடிமலர் கவரிகண் ணடியுந் தூக்கினான்.

(இ - ள்.) பரந்துபட்ட உள்ளிடமெங்கும் அழகுமிகு முறைமையாலே ஒளியுடைய தனிமணிகளையும் வேறாகக் கோத்த மாலைகளையும் குறுக்காகவும் நெடுகவும் நிரல்படவமைத்துப் பல்வேறுவகைக் கனிகளையும் மணமலர்களையும் கவரிகளையும் கண்ணாடிகளையும் நால விட்டனன்.

(வி - ம்.) விடுமணி, கதிர்மணி, பன்மணி எனத்தனித்தனி யியைக்க. கவின் - அழகு.

(17)

 பாங்கெலாம் பசுநெடும் பந்த ரிட்டதின்
 ஓங்கிய தூண்டொறு மொலிந்த பூகதம்
 தூங்குதாற் றரம்பைகள் சுவைக்க ரும்புவின்
 தாங்குமைந் தருக்களுந் ததைய யாத்தனன்.

(இ - ள்.) பக்கங்களெல்லாம் பசிய புதிய பந்தர்களமைத்து அப்பந்தரின் உயர்ந்த தூண்தோறும் தழைத்த கமுகுகளையும் நால்கின்ற குலைவாழைகளையும் சுவையுடைய கரும்புகளையும் வானுலகந் தன்பாற் கொண்டுள்ள கற்பக முதலிய ஐவகை மரங்களையும் செறியும்படி கட்டினன்.

(வி - ம்.) பூகதம் - கமுகு. அரம்பை - வாழை. ஐந்தரு - அரி சந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என்பன.

(18)

 தேசிகப் பட்டினாற் செம்பொற் றாரினால்
 யோசனை கமழ்கடி யுயிர்க்கும் போதினால்
 வாசமென் கொழுந்தினான் மருத்த வேரினால்
 வீசொளி மணிகளால் விதானித் தானரோ.