பக்கம் எண் :

1268தணிகைப் புராணம்

(இ - ள்.) அழகிய பட்டினானும் செம்பொன் மாலைகளானும் ஒரு யோசனைத்தொலைவு மணங்கமழாநின்ற மலர் மாலைகளானும் மணமுடைய மெல்லிய மருக்கொழுந்துகளானும் மணமுடைய வெட்டிவேர் முதலியவற்றானும் ஒளி வீசுகின்ற மணி மாலைகளானும் பந்தரிட்டனன்.

(வி - ம்.) தேசிகம் - அழகு. தார் - மாலை. கடி - மணம். மருத்த - மணமுடைய. விதானம் - மேற்கட்டி.

(19)

 வித்துரு மத்தினால் விதான முற்றுறீஇ
 நித்தில வெண்மண னிரந்த ரிப்பியாப்
 பைத்தநீ ரருவிமேற் பாய்த்திப் போக்குபு
 தொத்துயிர் மலர்களும் விரையுந் தூவினான்.

(இ - ள்.) மேலும் இளந்தளிர்களானும் மேற்கட்டியிட்டு முடித்து, முத்துகளாகிய வெண்மணல் பரப்பி அதன்மேல் பசிய நீராலாய அருவியைப் பாய்ச்சி வரன்றாது போகவிட்டுக் கொத்துகளீன்ற மலர்களையும் நறுமணப் பொருள்களையும் தூவினான்.

(வி - ம்.) வித்துருமம் - இளந்தளிர். முற்றுறீஇ - முற்றச்செய்து. அரிப்பியா - அரித்தலைச்செய்யாத; வரன்றாத.

(20)

 பனியென நறும்புனல் பந்திற் றூவுவ
 நனிவளி விசிறியி னடந்து வீசுவ
 கனிமுத லுதவுவ காமர் பாவைகள்
 அனிதம்விண் ணவர்களு மயிர்ப்ப வாக்கினான்.

(இ - ள்.) பந்துகளாலே நறிய நீரினைப் பனிபோன்று நுண்ணிதாகத் தூவுவனவும், அங்குமிங்கு நடந்து சென்று மிக்க காற்றினை விசிறியால் வீசுவனவும், கனி முதலியவற்றை அளிப்பனவும் ஆகிய அழகிய இயந்திரப் பாவைகள் எண்ணிறந்தவற்றை அமரரும் உயிருடையவோ என்று ஐயுறும்படி வேண்டுமிடமெல்லா மியற்றினன்.

(வி - ம்.) காமர் - அழகு. அனிதம் - அளவில்லாமை.

(21)

 பந்தர்பைங் காரெனப் பசும்பொற் றார்கணான்
 றந்தினின் றசைவன வலங்கு மின்னெனக்
 கொந்தொளிப் பன்மணிக் கோவைத் தோரணம்
 இந்திர வில்லென விலங்க யாத்தனன்.

(இ - ள்.) பந்தர்கள் புதிய முகில்கள் போன்றும் அவற்றில் தொங்கி நின்றசையா நின்ற பசிய பொன்மாலைகள் அம்முகிலிலசையும் மின்னல்கள்போன்றும், மிக்க வொளியையுடைய பன்னிற மணி மாலைகளானியன்ற தோரணம் அம்முகிலின்கட் டோன்றும் இந்திரவில் போன்றும் விளங்கும்படி இயற்றினன்.

(வி - ம்.) அந்தில் - அதில், அவ்விடத்து எனினுமாம்.

(22)