பக்கம் எண் :

1270தணிகைப் புராணம்

அவ்வப் பொருள் அவ்வவ்விடத்தே கைகூடிப் பயன்படுதற் பொருட்டு நினைந்த பொருளை அப்பொழுதே வழங்குவனவாகிய ஒளியுடைய சிந்தாமணிகளையும் சங்கநிதி பதுமநிதி என்னும் இருவகை நிதிகளையும் கற்பக மரத்தையும் காமதேனுவையும் இடந்தொறும் இடந்தொறும் நலமுண்டாக அமைத்தனன்.

(வி - ம்.) முன்னுதல் - நினைதல். பயம் - பயன். சவி - ஒளி. மணி - சிந்தாமணி. நவம் - புதுமை.

(26)

 பஞ்சியின் மிதித்தொறும் பனிக்கு மாதரார்
 அஞ்சிலம் படித்துணை யலரி டுந்தொறும்
 விஞ்சிய வாகையின் விரைத்த பூவென
 எஞ்சலின் றெறுழ்வரை யிளக வைத்தனன்.

(இ - ள்.) பஞ்சின்மேல் அடியிடினும் வருந்து மியல்புடைய மகளிரின் அழகிய சிலம்பணிந்த மெல்லடிகளாகிய மலரினை இடுந்தோறும் குறைவற்ற வலிமையுடைய மலைகள் மிகுதியான வாகையினது மணங்கமழா நின்ற பூப்போன்று இளகும்படியும் அமைத்தான்.

(வி - ம்.) பஞ்சி - பஞ்சு. அடித்துணையாகிய மலர் என்க.

(27)

 காலையின் மாலையைக் கலக்க வேண்டினும்
 மாலையிற் காலையை மணப்ப வேண்டினும்
 கோலவே றிருதுவைக் கூட வேண்டினும்
 மேலென லின்றியே விளைய வூக்கினான்.

(இ - ள்.) காலைப்பொழுதிலே மாலைப்பொழுதின் இன்பத்தை நுகர விரும்பினும், மாலைப்பொழுதின்கண் காலைப்பொழுதின் இன்பத்தை நுகர விரும்பினும், பின்பனிப் பருவமாகிய அப்பருவத்தையன்றி இளவேனில் முதலிய அழகிய பிற பருவங்களைக் கூடுதற்கு விரும்பினும் பின்னர் ஆகுக என்றிருக்க வேண்டாதபடி அவை அப்பொழுதே அவ்வவர்க்கு நிகழும்படியும் செய்தனன்.

(வி - ம்.) கோல இருது - வேறு இருது என இயைக்க.

(28)

 விருத்தர்கள் பாலராய் மேவ வெஃகினும்
 உரைத்தமூப் பிளையவ ருறுதல் வெஃகினும்
 புரைத்தவ ரும்பராய்ப் புலவர் மக்களாய்ச்
 சரித்திடல் வெஃகினுஞ் சமையச் செய்தனன்.

(இ - ள்.) அகவை முதிர்ந்தோர் இளைஞராக விரும்பினும், முற் கூறப்பட்ட முதுமையை இளைஞர் பெற விரும்பினும், குற்றமுடைய மானிடர் தேவராகியும் தேவர் மானிடராகியும் இயங்குதல் விரும்பினும் அவரவர் நினைந்தவாறே அமையும்படியும் செய்தனன்.