| அருவிமும் மதத்த வேழத் தரசினை மண்ணுச் செய்து | | குருமணி தகர்த்த ரைத்துக் குழைத்தசெஞ் சேற்றின் | | வார்கைஉருகெழு கோலந்தீட்டி யோடைவண் ணுதற்கண் வீக்கித் | | திருமலி கவரிக் கற்றை சிறுதுளைக் காதிற் றூக்கி. |
(இ - ள்.) அருவியாக மூன்று மதங்களையும் பொழியா நின்ற அரசுவா வாகிய களிற்றியானையைக் குளிப்பாட்டி நிறமிக்க மணிகளை நுறுக்கி அரைத்துக் குழைக்கப்பட்ட சாந்தினாலே நெடிய துதிக்கையின்மேல் ஓவியமெழுதி வளப்பமுடைய நெற்றியின்மேல் முகபடா மணிந்து அழகுமிக்க கவரிமான் மயிர்க் கற்றைகளைச் சிறிய துளையினையுடைய செவியிலே தூங்கவிட்டு, (வி - ம்.) வேழத்தரசு - பட்டத்து யானை. மண்ணுச் செய்து - குளிப்பாட்டி. வார் - நெடிய. உரு - அழகு. ஓடை - முகபடாம். (33) | ஏற்றுரிப் போர்வை வள்வா ரிணைமுர செருத்தி னேற்றித் | | தோற்றிய வுலக மெல்லாந் துயர்கெட வினிது வாழி | | நாற்றிசை வணங்கு மிந்த நகர்நனி சிறந்து வாழி | | வீற்றுவீற் றறங்க ளெல்லா மறன்கடை விளிய வாழி. |
(இ - ள்.) ஆனேற்றினது தோலானே போர்க்கப்பட்டு, பெரிய வாரானே இணைக்கப்பட்ட முரசத்தினை அவ்வியானையின் பிடரில் ஏற்றி, இறைவனாற் படைக்கப்பட்ட உலகத்துயிர்கள் எல்லாம் இடரின்றி இனிதே வாழ்க! நாற்றிசையோரும் பணிகின்ற இந்தத் திருத்தணிகை நகரம் பெரிதும் சிறப்புற்று வாழ்க! பல்வேறு வகைப்பட்ட அறங்கள் அனைத்தும் தீவினை அழியும்படி வாழ்க! (வி - ம்.) ஏறு - காளை. உரி - தோல். இணைமுரசு - இரட்டை முரசுமாம். அறம்வளரப் பாவந் தேய்தலின் ஏதுவாக்கினார். (34) | கம்பமால் களிநல் வேழக் கடாங்கவிழ் முகத்து முக்கண் | | எம்பிரா னருளிச் செய்த தியாவருங் கேண்மின் கேண்மின் | | தம்பிவேட் டுவர்தஞ் சார்பிற் றங்கிய வமிழ்தன் னாளை | | உம்பரார் துவன்ற மன்ற லுஞற்றுவ திவண தாமே. |
(இ - ள்.) தறியிற் கட்டப்படும் பெரிய களிப்பினையுடைய இலக்கண நன்மை பொருந்திய யானையினது மதமொழுக்கும் முகத்தினையும் மூன்று கண்களையுமுடைய எம்பெருமானாகிய மூத்தபிள்ளையார் அருளிச் செய்த இச் செய்தியினை எல்லீருங் கேளுங்கள்! கேளுங்கள்! தம் தம்பியாராகிய முருகப் பெருமானார் வேடரிடையே உறைந்து வளர்ந்த அமிழ்தம் போன்ற வள்ளிநாயகியாரை அமரர்கள் நெருங்கா நிற்பத் திருமணவினை நிகழ்த்துவது இத்திரு நகரத்தின்கண்ணேயாம். (வி - ம்.) கம்பம் - தூண். கடாம் - மதம். தம்பி - முருகன். (35) |