பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1273

 வெற்பட லழித்த வெள்வேல் விண்ணவர் கோமா னேவக்
 கற்பகஞ் சுரபி சிந்தா மணிநிதி கலனூண் மற்றும்
 அற்பகந் தழைய நல்கு மவையினி தேற்ற ணிந்து
 பொற்பவுண் டார்வ முற்றப் பொருந்துபு மகிழ்ச்சி கொண்மின்.

(இ - ள்.) மலைகளின் சிறகரிந்து அவற்றின் ஆற்றலை அழித்த வெள்ளிய வச்சிரம் ஏந்திய தேவேந்திரன் ஏவுதலானே கற்பக மரமும் காமதேனுவும் சிந்தாமணியும் சங்கநிதி பதுமநிதிகளும், அணிகலன்களும் உண்டியும் பிறவும் அன்பு பெருக நுங்கட்கு வழங்குவனவாம். அவையிற்றை இனிதே ஏற்று அணிந்துகொண்டும், பொலிவுண்டாக உண்டும், ஆர்வமுதிர இருந்து மகிழ்ச்சி கொள்ளுங்கோள்!

(வி - ம்.) வெற்பட லழித்த வெள்வேல் விண்ணவர் கோமான் என்றது முருகப் பெருமானுக்கும் பொருந்தும். சுரபி - காமதேனு. அற்பு - அன்பு. பொருந்துபு - பொருந்தி.

(36)

 விளக்கொடு தூப மார்த்தி விதானித்து வீதி தோறும்
 துளக்கமி னிறைநீர்க் கும்பம் பாலிகை தொகுமின் வார்ந்த
 வளக்கமு கரம்பை வேழம் வயின்றொறு நடுமின் செய்மின்
 உளக்குலந் தணத்த றேற்றா வோவியம் பித்தி தோறும்.

(இ - ள்.) இல்லந்தோறும் பந்தரிட்டு அதன்கண் திருவிளக்கும் நறுமணப் புகையு மிடுங்கோள், வீதிதோறும் அசைவில்லாத நிறை நீர்க்குடமும் முளைப்பாலிகையும் தொகுத்து வையுங்கோள், நீண்ட வளமான கமுகும் வாழையும் வேண்டு மிடந்தோறும் நடுங்கோள், சுவர்தோறும் காண்போர் நெஞ்சத் திரளினின்றும் அகலாத எழிலுடைய ஓவியங்களைத் தீட்டுதல் செய்யுங்கோள்!

(வி - ம்.) தூபம் - புகை. கும்பம் - குடம். உளம் - நெஞ்சம்.

(37)

 விரைமலர்ப் பந்தர் வீதி யிடுமின்றோ ரணங்கள் யாமின்
 பரவைவிண் ணகடு தூர்ப்பப் பலகொடி யெடுமி னென்னா
 இரவியிற் பிறைபல் காற்சென் றெறிந்தெனக் குணில்கை யோச்சி
 உரவுரு முரற்றிற் றென்ன வொலிமுர சுரப்பி னானால்.

(இ - ள்.) வீதிதோறும் மணமலரானே பந்தரிடுங்கோள்! தோரணங்கள் கட்டுங்கோள்! பரந்த வானத்தின் இடை தூர்ந்துபோம்படி பல்வேறு கொடிகளையும் உயர்த்துங்கோள்! என்று கூறி ஞாயிற்று மண்டிலத்தே இளம்பிறை பலகாலும் சென்று சென்று தாக்கினாற் போன்று குறுந்தடியைக் கையினாலெறிந்து எறிந்து இடி இடித்தாற் போன்று ஒலிமிக்க முரசினை முழக்கா நின்றான்.

(வி - ம்.) யாமின் - கட்டுங்கோள். பரவை - பரப்புடைய. என்னா - என்று கூறி.

(38)