| பாற்றப் புக்குப் பசுந்தொடைத் தாதுதேன் | | தூற்றிச் சேதகம் வேறுந் தொகுத்தனர். |
(இ - ள்.) வேறுபாடுடைய பந்துகளிலே நறுமண நீரை ஏற்று மின்போன்ற இடையினையுடைய மகளிர் ஒருவர்மேல் ஒருவர் தூவி இனிதே ஆடியமையாலே உண்டான சேற்றினைக் கழுவுதற்குப் போய்த் தமது பசிய மலர்மாலைகளிலுள்ள தேன்களைத்தூற்றிப் பிறிதொருவகையான சேறு செய்வாராயினர். (வி - ம்.) வீற்று - வேறுபாடு. விரைப்புனல் - நறுமணநீர். பாற்ற - அகற்ற. சேதகம் - சேறு. (42) | ஓதி தாழநு டங்கியொண் கொம்பனார் | | சோதி நித்திலத் தோரணம் யாத்தொறும் | | வீதி வாய்ப்பிழைத் துக்கமின் கால்புயல் | | சீத ஆலிகள் சிந்தின போன்றவே. |
(இ - ள்.) ஒளியுடைய பூங்கொம்பு போன்ற மகளிர்தம் கூந்தல் தாழா நிற்பவும் இடை வளையவும் ஒளியுடைய முத்துத் தோரணங்களைக் கட்டும் பொழுது அத்தோரணத்தினின்று தப்பித் தெருவிலே வீழ்வனவாகிய முத்துக்கள் மின்னுகின்ற முகில் குளிர்ந்த ஆலங்கட்டிகளைச் சிந்துதலைப் போன்றிருந்தது. (வி - ம்.) ஓதி - கூந்தல். நித்திலம் - முத்து. யாத்தல் - கட்டுதல். ஓதி முகிற்கும் இடை மின்னுக்கும் முத்து ஆலிக்கும் உவமை. (43) | வகைசெ யோவியப் பித்திகை மாசுறாத் | | தகைசெ யாடியி னாறிய சாயையும் | | நகைசெய் தாமங்க ணாற்றுநர் தம்மையும் | | தொகைசெய் தியாவருந் தோல்வியிற் றங்கினார். |
(இ - ள்.) பல்வேறு வகையாகச் செய்யப்பட்ட சித்திரச் சுவரின் கண்ணும் குற்றமற்ற அழகைத் தரும் கண்ணாடிகளினூடே தோன்றிய நிழலையும், ஒளிசெய்கின்ற மணிமாலைகளை நாலவிடுகின்ற மகளிரையும் (வேற்றுமை காணமாட்டாமல்) ஒருசேர எண்ணி எல்லோரும் தோல்வியுற்றனர். (வி - ம்.) தகை - அழகு. சாயை - நிழல். (44) | கருப்பு ரப்புனல் குங்குமக் காமர்நீர் | | மருத்த மாமத மற்றும்வெவ் வேறுறத் | | துருத்தி வாங்கித் துவற்றினர் வானவில் | | திருத்தி னாலென வீதிகள் சீர்த்தவே. |
|