பக்கம் எண் :

1276தணிகைப் புராணம்

(இ - ள்.) கருப்பூரங் கலந்த நீரும் குங்குமங்கலந்த அழகிய நீரும் மணமுடைய புனுகு கலந்த நீரும் பிறவும் ஏவலர் நீர்வீசுந் துருத்தியிலே ஏற்று வேறு வேறாகத் தூற்றினராகலான் வீதிகள் இந்திரவில்லை நிமிர்த்திக் கிடத்தினாற் போன்று பல நிறங்களைப் பெற்றுச் சிறப்புற்றன.

(வி - ம்.) காமர் - அழகு. மா - புழுகு பூனை. துவற்றினர் - தூவினர்.

(45)

 இந்தி ரச்சிலை வாணுதற் கெஞ்சிமண்
 வந்து வீழ மரீஇயபைங் காரினம்
 அந்தில் வௌவ வடுத்தது போன்மெனப்
 பந்தர் வீதிதொ றும்பயில் வித்தனர்.

(இ - ள்.) இந்திரவில் மகளிரின் ஒளி பொருந்திய நெற்றியின் அழகுக்குத் தோற்றமையால் அச்சமுற்று நிலத்திலே வந்து வீழ்ந்து கிடந்தாற் போன்ற அவ்வீதிகளிலே, அவ்விந்திர வில்லைப் பொருந்திய முகில்கள் அவற்றை எடுத்துக்கொள்ள வந்தணுகினாற்போன்று தோன்றும்படி பந்தர்களை அமைத்தனர்.

(வி - ம்.) பந்தர்கட்கு முகிலும் வீதிகட்கு வானவில்லும் உவமை. போன்ம் - போலும்.

(46)

 அடுத்த காரக லாமையி ருங்கனம்
 தொடுத்தி ருத்துதல் போன்மெனத் தூக்கினார்
 மடுத்த தேத்தொடை வண்கனி யாடிவில்
 விடுத்த பன்மணித் தொத்தும் விராவியே.

(இ - ள்.) அவ்வாறு வந்து அடுத்த முகில்கள் போய்விடாமல் பெரிய பாரத்தை அவற்றிற் கட்டி இருப்பித்தல் போன்று தேன் நிறைந்த இறால்களையும் வளமுடைய பலாப்பழ முதலிய பழங்களையும் கண்ணாடிகளையும், ஒளிவிடாநின்ற பல்வேறு மணித்திரள்களையும் கலந்து அப்பந்தர்களிலே தூங்க விட்டனர்.

(வி - ம்.) அகலாமைப் பொருட்டு என்க. வில் - ஒளி.

(47)

வேறு

 விழுத்துக ளுண்டமே னிலங்க ழீஇவிடச்
 செழுப்புனல் சுருங்கையிற் செறிந்து வீழ்வன
 குழுப்புன லருவியாக் குன்றம் போன்றன
 வழுத்திய பன்மணி யவிர்பொன் மாடமே.