பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1277

(வி - ம்.) துகள் படிந்த விழுமேனிலம் என மாறுக. விழுமம் - சிறப்பு. செழுப்புனல் - வலித்தல் விகாரம்.

(48)

 சாந்திழுக் கியபதந் தைய லாரின்வீழ்
 தேந்தொடை யூற்றுகட் டேற லிற்கழீஇப்
 பூந்துகட் குப்பையிற் புலர்த்தப் போந்தொளி
 ஏந்துபல் கொடியெடுத் தார்க ளெங்கணும்.

(இ - ள்.) பணியாளர் சந்தனச் சேற்றிலே வழுக்கிய தம்முடைய அடிகளை மகளிர்பானின்றும் வீழ்ந்த தேனையுடைய மலர்மாலை துளியா நின்ற மதுத் தெளிவினாலே கழுவிக்கொண்டு அவ்வடிகள் புலருமாறு பூந்துகளின் குப்பைமிசையே நடந்துபோய் ஒளியோடு உயர்ந்த பல்வேறு கொடிகளையும் யாண்டும் உயர்த்துவாராயினர்.

(வி - ம்.) பதம் தேறலிற் கழுவி அவை புலருமாறு குப்பையிற் போந்து கொடி எடுத்தனர் என்க.

(49)

 கவானெழில் கவர்ந்தபூங் கதலி வண்களக்
 குவாலெழில் கவர்குளிர் கமுகு தோட்டுணைத்
 தவாவெழில் கவர்ந்தவின் கரும்பும் யாத்தனர்
 உவாவெழில் வாய்தலி னொழுகு தூண்டொறும்.

(இ - ள்.) மகளிர் தம்முடைய துடையின் அழகைக் களவுகொண்ட அழகிய வாழையினையும், தம் வளவிய கழுத்தினது திரட்சியான அழகினைக் களவுகொண்ட கமுகினையும், தமது தோள்களின் கெடாத அழகினைக் கவர்ந்த இனிய கரும்பினையும் தம்மில்லத்து நிறைந்த அழகையுடைய வாயிலின்கண் வரிசையாக நின்ற தூண்தோறும் கட்டினார்கள்.

(வி - ம்.) களவு கொண்டோரைத் தூணிற்கட்டுதல் ஒரு வழக்கு. களம் - கழுத்து. குவால் - திரட்சி. உவா - நிறைவு.

(50)

 வடிவினும் போதினும் வார்க வான்குழ
 லொடுபொரல் பொறுத்தவ ருரைபொ ருங்கனிக்
 கடுவது புரிந்தன ரம்ம வோவெனப்
 படுகனிக் கதலிகள் பலவும் வீட்டினர்.

(இ - ள்.) இம்மகளிர் வடிவானும் மலரானும் தமது நெடிய துடையையும் கூந்தலையும் ஒப்பாதலைப் பொறுத்துக்கொண்டு (இளங் கதலிகளை வெட்டாமல் விட்டுத்) தமது சொல்லை இனிமையால் ஒக்கின்ற கனியுடைமைக்கு மட்டும் சினந்து கொலை புரிந்தனர் அம்மவோ! என்று கண்டோரிரங்கக் கனிந்த வாழைகள் பலவற்றையும் வெட்டித் தள்ளினர்.

(வி - ம்.) கவான் - துடை. அம்மவோ - இரக்கக் குறிப்பு.

(51)