பக்கம் எண் :

1278தணிகைப் புராணம்

 மெத்திய புகையொளி விதான வேதியில்
 வைத்தனர் பூரண கும்பம் வைத்தவர்
 முத்தணி முலைக்குழன் முனிவில் கண்ணிணைக்
 கித்தகைத் தறிகென வெவரு மாற்றவே.

(இ - ள்.) வெறாத நம் கண்கட்கு இம்மடவாருடைய முத்தணிந்த முலையின்மேற் படர்ந்த கூந்தல் இத்தகையது என்று யாவரும் அறிக என்று ஒப்புமை கூறும்படி, மகளிர் மிக்க புகை சூழ்ந்த ஒளியினையுடைய விதானிக்கப்பட்ட வேள்வி மேடையில் நிறை குடங்களை வைத்தனர்.

(வி - ம்.) வேதி - மேடை. அறிகென - விகாரம் ; அறிக என.

(52)

வேறு

 வண்ணக் கனகஞ் சிதர்செய் தினிய மருவூட்டும்
 சுண்ணத் திரளுஞ் சுடர்பன் மணியுஞ் சொரிபைந்தேம்
 கண்ணித் திரளுங் கலையின் றிரளுங் கலவித்தான்
 விண்ணத் தமர்பல் லுலகுங் கவல விளங்கின்றே.

(இ - ள்.) இத் திருத்தணிகை நகரம் நிறம்மிக்க பொன்னைப் பொடி செய்து இனிய நறுமணமூட்டப்பட்ட சுண்ண வகைகளும் சுடரா நின்ற பல்வேறு வகை மணிகளும் தேன்றுளிக்கும் பசிய மலர் மாலைத் திரளும் கலைத்தொழிலாலாய பொருட்டிரளும் கலக்கப்பட்டு வானத்தில் உறைகின்ற பலவேறுலகங்களும் வருந்தும்படி விளங்கிற்று.

(வி - ம்.) வண்ணம் - நிறம். கனகம் - பொன். மரு - மணம். கலை : ஆகுபெயர். விளங்கின்று - விளங்கிற்று.

(53)

 தோடுங் குழையுஞ் சுடரப் புழுகின் மெழுக்கிட்ட
 பாடுங் குவளைக் கமலந் தொடரிப் பலநாற்றும்
 மாடுந் துவள்சிற் றிடையார் மலர்மென் குழலூடும்
 ஆடுங் களிவண் டணவுஞ் சுலவு மகலாவால்.

(இ - ள்.) ஆடாநிற்கும் களிப்பினையுடைய வண்டுகள் துவள்கின்ற சிறிய இடையையுடைய மகளிர் தந்தோடும் குழையும் ஒளிரும் படி புழுகாலே மெழுகிய இடங்களினும், அவர் குவளை தாமரை முதலிய மலர்களானாய மாலைகள் பலவற்றைத் தூங்கவிடுகின்ற இடங்களினும் அம்மடவார் மலரையுடைய மெல்லிய கூந்தலினூடும் செல்லும் அவ்விடத்திலேயே சுழலாநிற்கும். அவ்விடத்தினின்றும் அகன்று போகமாட்டா.

(வி - ம்.) பாடு, மாடு என்பன இடப்பொருட்டு.

(54)