பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1279

 தவளத் தரளத் திரளுந் தவழ்வெள் வளையுஞ்செம்
 பவளத் திரளும் பலவுங் கவரப் பனிமுந்நீர்
 அவன்மிக் குடைய தணிசெய் தவைநிச் சமும்வீழ்த்தத்
 தவவிட் புலனீண் டகல்வுற் றஃதத் தடவெற்பு.

(இ - ள்.) அந்தப் பெரிய திருத்தணிகைமலை, குளிர்ந்த கடலினின்றும் வெள்ளிய முத்துத் திரளையும், தவழாநின்ற வெள்ளிய சங்கங்களையும், சிவந்த பவழத் திரளையும் கவர்ந்துகொண்டமையாலே நடுங்காநின்ற அக்கடலினுக் கிரங்கி வீணாக மிகுந்து கிடப்பவற்றையும், தனக்கு ஒப்பனை செய்யப்பட்டவற்றையும் நாடோறும் அக்கடலின்கண் வீழ்த்தற்பொருட்டு மிகவும் வானவெளியிலே வளர்ந்து நாற்றிசையினும் விரிவுற்றது (போன்றது)

(வி - ம்.) தரளம் - முத்து. வளை - சங்கு. அவன் - அவம். பனி முந்நீர் : வினைத்தொகை. நிச்சமும் - நாடோறும்.

(55)

 வனக்குன் றுவமம் பெறுமா நகர மின்றென்னா
 விளக்குற் றனபோன் மெனவுங் கடிவீழ் விண்ணோர்கள்
 உளக்கொண் டெழுசோ டையைமெச் சினபோன் மெனவுந்தாம்
 துளக்குற் றனவாற் றுகில்வார் கொடிகள் சுடர்சென்னி.

(இ - ள்.) அம்மலையுச்சியில் நெடிய துகிற்கொடிகள், வளமிக்க இத்திருத்தணிகைக்கு நிகரான பிறிதொரு சிறந்த நகரம் இல்லை என்னும் வெற்றியை விளக்குவனபோலவும், திருமணத்தை விரும்பி வந்த தேவர் தம் நெஞ்சத்தே கொண்ட விடாயை மெச்சித் தலையசைப்பனபோலவும் அசைந்தாடா நின்றன.

(வி - ம்.) என்னா - என்று. போன்ம் - போலும். சோடை - விடாய் ; வறட்சி.

(56)

 சந்தக் களிமென் பனிநீர் மலர்வெண் டரளத்தொண்
 கொந்துங் கஞலிக் குளிர்கூ திரின்மிக் குறுவிப்ப
 அந்திற் புகையுஞ் சுடரும் பனவோ ரமைதீயும்
 சிந்தித் திகழ்வித் தனதே வரும்வீ ழிளவேனில்.

(இ - ள்.) சந்தனச் சேறும் பனிநீரும் மலர்களும் வெள்ளிய முத்தின் ஒளியுடைய திரட்சியும் செறிந்து அப் பின்பனிப் பருவத்திலே குளிர்மிக்க கூதிர்ப் பருவத்தை யுண்டாக்கின, இனி அவ்விடத்தே இடப்படும் நறுமணப் புகையும், விளக்குகளும், பார்ப்பனர் வளர்க்கும் வேள்வித் தீயும் தேவர்களும் விரும்புமியல்புடைய இளவேனிற் பருவத்தை யுண்டாக்கின.

(வி - ம்.) சந்தம் - சந்தனம். கொந்து - திரள். அந்தில் - அவ்விடத்தே.

(57)