| | அற்றை ஞான்றவ ரவர்திரு நகரணி படுத்த | | | தெற்றை ஞான்றும்விண் ணவரிருந் தியம்பினு முடியா | | | துற்ற ஞான்றவ ரவருறு மகிழ்ச்சியை யுன்னின் | | | கொற்ற வேலவன் முதலியோர்க் கல்லது கூடா. |
(இ - ள்.) அந்தத் திருமணநாளின்பொருட்டு அந்நகரத்தோர் அந்நகரத்தைத் தாந்தாமே அணிசெய்த செயலினை விண்ணவர் எக்காலத்தும் சாவாதிருந்து கூறினும் முடிவுறாதாம். அத்திருமணம் நிகழ்ந்த பொழுது அந்நகர மாந்தர் எய்திய மகிழ்ச்சியை வெற்றி வேலையுடைய முருகனே உணர்தல்கூடும். ஏனையோர் உணர்தலுமியலாவாம். (வி - ம்.) ஞான்று - பொழுது. கொற்றம் - வெற்றி. (61) | | இயவு ளாகிய வெரிதவழ்ந் திலங்குவே லிறைவன் | | | வியவ னாகிய வீரவா குப்பெயர் விமலன் | | | புயல்வல் லேற்றுவண் கொடியினான் புதல்வியை யண்மிச் | | | சயவென் றேத்தினன் றாழ்ந்தன னருளிய துரைத்தான். |
(இ - ள்.) இறைவனாகிய தீக்கான்று விளங்கும் வேலினையுடைய முருகப் பெருமானுடைய தூதுவனாகிய வீரவாகு என்னும் தூய்மையோன், முகிலிற் றோன்றும் வலிய இடியேற்றினைக் கொடியாகவுடைய இந்திரன் மகளாராகிய தேவயானையம்மையாரை அணுகி வெல்க! வெல்க! நின்றிருவடிகள் என்று வாழ்த்தி வணங்கி எம்பெருமான் அருளிய செய்தியினை உணர்த்தினன். (வி - ம்.) இயவுள் - கடவுள். வியவன் - ஏவலன் ; தூதன். தாழ்ந்தனன் : முற்றெச்சம். (62) | | உவகை பொங்கினள் போதுமென் றுத்தமி யெழலும் | | | உவரி பொங்கியாங் கொலித்தன குணில்பொரு முரசம் | | | கவரி துள்ளின வசைந்தன காமர்சாந் தாற்றி | | | கவிகை யோங்கின துவன்றின காடெனத் துவசம். |
(இ - ள்.) செய்தி கேட்டவுடன் தெய்வயானையார் மகிழ்ச்சி மிக்கனள். அவ்வாறே திருத்தணிகைக்குச் செல்வோம் என்று எழுந்தருளியவளவிலே குறுந்தடியாற் றாக்கப்படும் முரசங்கள் கடல் பொங்கினாற்போன்று ஆரவாரித்தன ; சாமரைகள் அசைந்தன ; அழகிய ஆலவட்டங்களும் குடைகளும் உயர்ந்தன ; கொடிகள் காடுபோன்று நெருங்கின. (வி - ம்.) உத்தமி - தெய்வயானை. சாந்தாற்றி - ஆலவட்டம். கவிகை - குடை. துவசம் - கொடி. (63) | | வணங்கி முன்கையின் மடிவிரித் தடுத்தனர் சில்லோர் | | | இணங்கு பாதுகை திருவடி யிணக்கினர் சில்லோர் |
|