பக்கம் எண் :

1282தணிகைப் புராணம்

 கணங்கொண் டாடினர் பாடினர் களித்தனர் சில்லோர்
 பிணங்கு பேரொலிப் பெருஞ்சனம் விலக்கினர் சில்லோர்.

(இ - ள்.) சிலமகளிர் தேவயானையை வணங்கி முன் பக்கத்தே நடை பாவாடை விரித்துக்கொண்டே சென்றனர். வேறு சிலர் அடியீடேந்தி அவருடைய திருவடிகளிலே பொருத்தினர், வேறு சிலர் கூட்டங் கூட்டமாகக் கூடிக் கூத்தாடா நின்றனர் ; மகிழ்ந்தனர். வேறு சிலர் மாறுபட்ட பேராரவாரத்தையுடைய கூட்டத்தை விலக்கி வழி செய்தனர்.

(வி - ம்.) மடி - துணி. பாதுகை - அடியீடு. சனம் - மாந்தர்.

(64)

 குவளை யுண்கணார் பற்பலா யிரர்குழீஇச் சூழ்ந்தார்
 தவளை மென்குரற் கிண்கிணி தாட்கவைஇ யரற்ற
 உவள கத்தினின் றொளிர்மணி வாய்தலை யண்மித்
 திவண்ம ணிப்பெரு விமானமேல் கொண்டுசென் றடுத்தாள்.

(இ - ள்.) செங்கழுநீர் மலர்போன்ற மையுண்ட கண்ணையுடைய மகளிர் பலப்பல ஆயிரவர் கூடிப் புடைசூழ்ந்து வரவும், தவளைக் குரல் போன்ற மெல்லிய குரலையுடைய கிண்கிணியணி திருவடிகளைப் பற்றிக் கிடந்து முழங்கா நிற்பவும், அந்தப்புரத்தினின்றும் சென்று வாயிலை அடைந்து ஒளிவிடும் மணிகளிழைத்ததொரு வானவூர்தியின்கண் ஏறிச் சென்று திருத்தணிகை மலையினை
அடைந்தனர்.

(வி - ம்.) உவளகம் - உரிமை மகளிரிருப்பிடம்.

(65)

 மாயி ரும்புவி மகண்முலை யிடைக்கிடந் தொளிரும்
 காயி ரும்பொனிற் கதிர்மணி யழுத்துபூ ணனைய
 மீயு யர்ந்தவிர் வெற்பினை நோக்கியுண் மகிழ்ந்தாள்
 கோயின் முன்பெருங் கோபுர நேர்குறு குற்றாள்.

(இ - ள்.) மிகப் பெரிய நிலமகளின் முலைகளினிடையே கிடந்து திகழாநின்ற, காய்ச்சிய பெரிய பொன்னின்கண் ஒளியுடைய மணியை அழுத்தி்ச் செய்திடப்பட்டதொரு அணிகலன்போன்று மிகவுயர்ந்து திகழும் திருத்தணிகை மலையினைக் கண்டு நெஞ்சினுள்ளே பெரிதும் மகிழ்ச்சி எய்தினர். திருக்கோயிலின் முன்னுள்ள பெருங் கோபுரத்திற்கு நேரே அணுகினர்.

(வி - ம்.) காயிரும்பொன் : வினைத்தொகை. வெற்பு - தணிகை மலை.

(66)

 விண்ணி றுத்திழி விமானநின் றிழிந்தனள் கோயில்
 உண்ண டந்தன ளுத்தனைப் பணிந்தன ளுவகைக்
 கண்ணி றைந்தநீர் கவிழ்ந்தனள் கருணைநோக் களித்தங்
 கண்ண றன்னிடத் திருத்தின னளவளா யிருந்தாள்.