பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1285

 கடவுளர் சிறையைச் சீத்தோன் கன்னியை மணப்பா னங்கண்
 உடன்வரு வீர்களென்னா வொலிகெழு பறையின் வைகும்
 நெடுநகர்க் கறைந்து சாற்றி நிகழ்பொருள் கொணர்தி ரென்னாத்
 தடவரைக் காவலோர்க்குச் சாற்றினன் முடங்க லுய்ப்பான்.

(இ - ள்.) பின்னர் நெடிய அந்நகரமாக்கட்கு, "தேவர்களைச் சிறைவீடு செய்த முருகப்பெருமான் நங்கன்னியாகிய வள்ளியைத் திருமணம் புரிவான். அத்திருமணம் நிகழும் திருத்தணிகைக்கு நீயிர் எல்லீரும் ஒருங்கேகூடி வருவீராக," என்று ஒலி பொருந்திய பறையினை அறைந்து அறிவிக்கச் செய்து மேலும், பெரியமலை நாட்டிற்கு அரசராகிய குன்றவர்கட்கு நும்பால் வழங்கும் பொருள்களைக் கொணர்வீராக என்று கட்டளையிட்டு முடங்கல் விடுபவன்.

(வி - ம்.) கடவுளர் - தேவர். உய்ப்பான் : வினையாலணையும் பெயர்.

(73)

 கன்றினைக் கவரி யூட்டிக் கழிந்தபாற் கலுழி நீத்தம்
 மென்றினை விளைக்கும் வள்ளி வெற்புரை குறவர் கோமான்
 என்றுல கெடுத்துக் கூறு மியல்பினே னியம்பு மாற்றம்
 குன்றென நிலவுஞ் சீர்த்திக் குன்றவர் யாருங் காண்க.

(இ - ள்.) உலகத்தோர், "கவரிமான்கள் தங் கன்றுகளையூட்டி எஞ்சிப் பிலிற்றிய பாலாகிய வெள்ளநீர் பாய்ந்து மெல்லிய தினையை விளைவிக்கும் வளமுடைய வள்ளிமலையிலே வாழ்கின்ற குறவர் கோமான்" என்று புகழ்ந்து பாராட்டெடுக்கு மியல்புடைய யான்கூறும் இம்மொழியினை மலைபோன்று நிலைபெற்ற புகழினையுடைய மலைநில வேந்தர் எல்லாம் காண்பாராக.

(வி - ம்.) கலுழி - வெள்ளம். உலகு : ஆகுபெயர் : சீர்த்தி - பெரும்புகழ்.

(74)

 முடங்குகி ரடக்கித் தோற்றுந் தோற்றுதி மூரி வேங்கை
 கடங்கவிழ் முகத்து வேழங் கண்ணகன் புவியுண் டார்க்கும்
 மடங்கலும் வேட்டை யாடி வதைத்தத ளணியுங் கொண்ட
 அடங்கருஞ் சீர்த்தி வெள்ளி யடுக்கல்வீற் றிருந்த வேடன்.

(இ - ள்.) வளைந்த நகங்களை உள்ளிற்கிழுத்து அடக்கவும் பின்னர் வெளியே நீட்டவும் உரிய தோற்றுருத்தியைக் கால்களிடத்தே உடைத்தாகிய பெரிய வேங்கையினையும் மதமொழுக்கும் முகத்தினையுடைய யானையினையும், இடமகன்ற நிலத்தையுண்டு ஆரவாரிக்கும் ஆளரிவினையும் வேட்டையாடிக் கொன்று அவற்றின் தோலினையும் அவ்வெற்றிக்கு அடையாளமாக உடுத்துதலையும் மேற்கொண்டு அடங்குதலில்லாத பெரும்புகழினையுடைய வெள்ளிமலையில் வீற்றிருந்த வேடன்.

(வி - ம்.) துதி - துருத்தி. மூரி - வேங்கை. புவியுண்டார்க்கும் மடங்கல் - நரசிங்கம். அதள் - தோல்.

(75)