| | தரைக்குயர் வரைகட் கெல்லாந் தலைமைசா லிமய வெற்பன் | | | விரைக்குழற் புதல்வி தன்னை வேட்டன னளித்த காளை | | | திரைக்கட லுலகங் கோட்டிற் சேர்த்தமா வேட்டை யாடி | | | வரைக்கெலா முரிமை பூண்ட மானவேல் வேட னம்மா. |
(இ - ள்.) அலையையுடைய உலகத்தைத் தன் கொம்பிலே ஏந்திய தொரு மாவினை வேட்டையாடி நிலவுலகத்தின்கண் உயர்ந்த மலைகளுக்கு எல்லாந் தலைமைத் தன்மை பொருந்திய இமயமலையரையனுடைய மணங்கமழும் கூந்தலையுடைய திருமகளை மணந்து ஈன்ற வேடன் மகனாகிய முருகன், அவன்றானும், மலைகட்கெல்லாம் உரிமை பூண்ட பெருமையுடைய வேற்படையினையுடைய வேடனேயாவன். (வி - ம்.) முற் செய்யுளிலுள்ள வேடன் என்றது இச் செய்யுளில் அளித்த என்பதனோடு இயைந்தது. மானம் - பெருமை. (76) | | விலங்கமர் பொருத கோட்டு வில்லுமிழ் குழையுந் தோடும் | | | அலங்குகொக் கிறகு மக்கு மதளுநம் மரபோ டேற்றங் | | | கலங்கிய தாதை போலா னேனுமா யிரத்தெட் டண்டம் | | | கலங்கும்வல் வேழச் சிங்க வேட்டையிற் கடவு ளொத்தான். |
(இ - ள்.) இவ்வேடன் எதிர்த்துப் போர் செய்து கொன்ற யானையினது கோட்டாலே செய்யப்பட்ட குழையினையும் தோட்டினையும் அசையாநின்ற கொக்கிறகினையும் அக்கமணியினையும் தோலினையும் நமது குலமுறைமைக் கேற்ப அணிந்து விளங்காநின்ற கடவுளாகிய தன் தந்தையை ஒப்பானல்லன் எனினும், ஆயிரத்தெட்டண்டங்களும் கலங்குதற்குக் காரணமான வலிய யானையையும் சிங்கத்தினையும் வேட்டையாடுதலிலே அவ்வேடனையே ஒப்பாவன். (வி - ம்.) விலங்கு - குறுக்கிடும். கோடு - யானைமருப்பு. அக்கு - அக்கமணி - சங்கு. வேழம் - கயமுகாசுரன். சிங்கம் - சிங்கமுகாசுரன். (77) | | அத்தகு வேடர் காற்று மருந்தவப் பயந்தாற் பெற்ற | | | மைத்தகன் றொளிர்ந்த வாட்கண் வள்ளிநா யகியை மாதோ | | | இத்தகு மாசித் திங்களிடைவரு பூச நாளால் | | | வித்தகத் தணிகை வெற்பின் விதியுளி கொடுப்ப நேர்ந்தேன். |
(இ - ள்.) அப்படிப்பட்ட தகுதியையுடைய வேடனுக்கு யான் செய்த அரியதவப்பயனாலே யான்பெற்ற கரியநிறமுடையவாய் அகன்று ஒளிரும் வாள்போன்ற கண்களையுடைய வள்ளிநாயகியை இந்தத் தகுதியுடைய மாசித் திங்களின் கண் நிகழ்கின்ற பூச நன்னாளில் வித்தகத்தை நல்கும் திருத்தணிகை மலையின்கண் முறைப்படியே திருமணஞ்செய்து கொடுப்ப நேர்ந்துள்ளேன். (வி - ம்.) மைத்து - கறுத்து. மாதும், ஓவும் அசைகள். வித்தகம் - சதுரப்பாடு ; அறிவுமாம். (78) |