பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1289

 ஊற்றிய மதத்து முகப்பெருங் கடவு
           ளும்பர்கோன் முகத்தினை நோக்கிப்
 போற்றியிங் குள்ளார் யாவரே யாக
           வவர்க்கெலாம் பொலிந்தவான் றருக்கள்
 தோற்றுமெல் லணியுந் தேனுவி னமுதுஞ்
           சுடர்தரு மணிதரும் பொருளும்
 ஆற்றநின் றளித்த லென்றன னென்றாங்
           கவனவற் றினைவியங் கொண்டான்.

(இ - ள்.) ஒழுகிய மதத்தினையுடைய யானைமுகத்தையுடைய கடவுள், இந்திரனை நோக்கி, அமரர் கோமானே! நீ இங்கித் திருமண விழாவிற்கு வந்துள்ளோர் யாவரேயாயினும் ஆகுக, வேற்றுமையின்றி அவரனைவர்க்கும் பொலிவுடைய தேவமரங்களாகிய கற்பக முதலியன படைத்து வழங்காநின்ற மெல்லிய ஆடைகளையும், காமதேனு வழங்கும் அமிழ்தவுண்டியினையும், ஒளிர்கின்ற சிந்தாமணி வழங்கும் அணியப்படும் அணிகலன்களையும், மிகவும் நீ நின்று அளிக்கக்கடவாய் என்று பணித்தனன். பணித்தவாறே அவ்விந்திரன் அச்செயலிலே அவற்றினை ஏவினான்.

(வி - ம்.) வான்தருக்கள் கற்பக முதலியன. தேனு - காமதேனு, மணி - சிந்தாமணி, ஆற்ற - மிகவும். வியம் - ஏவல்.

(84)

வேறு

 இன்றுகொல் யாம்பிறந் திட்ட நாளென
 ஒன்றிய வோகையி னொளிர்ந்த தாருவும்
 வென்றிகொ ளேனவும் வீதி மாமனை
 மன்றகம் புறநகர் வளங்கள் கான்றவே.

(இ - ள்.) இப்பணியைப் பெற்றமையானே எய்திய பெருமகிழ்ச்சி யினால் புத்தொளிபடைத்த கற்பகமரங்களும் தந்தொழிலிலே வெற்றி கொண்டுள்ள காமதேனுவுஞ் சிந்தாமணியும் இன்றுதான் யாம் பிறந்த பயனை எய்தும் நாளென மகிழ்ந்து வீதிகளினும் பெரிய மாடங்களினும் மன்றங் களினும் தாம் தாம் வழங்குதற்குரிய ஆடை அடிசில் அணிகலன்களைப் பெரிதும் வழங்காநின்றன.

(வி - ம்.) ஓகை - உவகை. கான்ற - வெளிப்படுத்தின என்றவாறு.

(85)

 எங்கணு மணிவன வெங்கு முண்பன
 எங்கணு மனத்தினுக் கினிய மெத்தலும்
 எங்கணும் யாவரு முகந்து கொண்டனர்
 எங்கணு மின்னண மில்லை யென்னவே.