பக்கம் எண் :

1290தணிகைப் புராணம்

(இ - ள்.) எங்கெங்கும் அணிந்து கொள்ளற்குரிய ஆடையணி கலன்களையும் எங்கெங்கும் உண்பனமுதலிய உணவு வகைகளையும். எவ்வெவ்விடத்தும் மனத்திற்கினியனவாக நிரப்பியவளவின், எவ்வெவ் விடத்தும் யாவரும் இத்தகைய பொருள்கள் இல்லை என்று புகழ்ந்து தத்தமக்கு விருப்பமானவற்றை
வாரிக்கொண்டனர்.

(வி - ம்.) அணிவன - ஆடை அணிகலன்கள். உண்பன - உண்பன தின்பன, பருகுவன, நக்குவன என்னும் நால்வகை யுண்டிகள்.

(86)

 பழையன தணந்தகன் பாரு ளார்தரு
 இழையணிந் தின்னமு தயின்று சித்திரம்
 தழைமணி மாடங்க டவிர்தன் மேயினார்
 விழைதரு தேவரின் வேறு தோற்றிலார்.

(இ - ள்.) மாந்தரெல்லாம் தாந்தாம் அணிந்திருந்த பழையனவாகிய ஆடை அணிகளை அகற்றி ஈண்டு வழங்கப்பட்ட ஆடையணிகலன்களை அணிந்து இனிய உணவினை யுண்டு விருப்பந்தருகின்ற தேவர்களினின்றும் வேற்றுமை காணப்படாராய் ஓவியமிக்க மணி மாடங்களிலே உரைவாராயினர்.

(வி - ம்.) அகன்பாருளார் - மாந்தர். பாருளார் தணந்து அணிந்து அயின்று தேவரின் வேறாகத் தோற்றிலாதாராய் மாடங்களில் தவிர்தன் மேயினார் என்க. தவிர்தல் - உறைதல்.

(87)

 அருந்திற லரசன தருளி னல்லது
 பொருந்திய விசும்பினும் புக்குக் கொள்ளருந்
 திருந்திய விழைகளுந் தெய்வ வுண்டியும்
 பெருந்தகை யமரரும் பெட்டு நொண்டனர்.

(இ - ள்.) இனி மாந்தரேயன்றியும் பெரிய தகுதிப்பாட்டையுடைய தேவர்தாமும், தம் அரிய திறலையுடைய அரசனாகிய இந்திரனுடைய அருள் பெற்றுழி ஒரே வழிப்பெறுதலன்றித் தாம் உறையும் வானுலகத்தும் தாம் விரும்பியபொழுது புகுந்து பெற்றுக் கோடற்கரிய திருத்தமுடைய அணிகலன்களையும் தெய்வத்தன்மையுடைய உணவினையும் ஈண்டுக் காண்டலின் பெரிதும் விரும்பி ஏற்றுக்
கொள்வாராயினர்.

(வி - ம்.) அரசன் - இந்திரன். விசும்பினும் : உம்மை உயர்வு சிறப்பு. பெட்டு - விரும்பி.

(88)

 இரப்பதுங் கொடுப்பது மின்மை யாலவண்
 இரப்பவர் கொடுப்பவ ரிவரென் பாரிலை
 நரைப்புமூப் புறுபிணி நசித்த லாற்றரை
 வரைப்பென விசும்பென வழக்க மற்றதே.

(இ - ள்.) அத்திருத்தணிகையின்கண், ஒன்றனை ஏற்போரும் ஒன்றனை வழங்குவோரும் இல்லாமையால், இவர் இரவலர், இவர் புரவலர் என்று