பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1291

கூறப்படுவோரும் இலராயினர், இனி, நரைத்தலும் மூத்தலும் மிக்க பிணியுமாகிய இவையுமின்மையால் இது நிலவுலகம், அஃது வானுலகம் என்று வழங்கும் வழக்கமும் இலதாயிற்று.

(வி - ம்.) இவரிரப்பவர் இவர்கொடுப்பவர் என்று ஈரிடத்தும் சுட்டினையியைக்க. உறுபிணி : வினைத்தொகையுமாம்.

(89)

 தெய்வத வுணவினா லணியின் சீரினால்
 மெய்வளம் வேற்றுமை தெரிப்ப வீழ்துணை
 மைவளர் கண்ணியர் மருண்டு மோதிரக்
 கைவிரல் காட்டலுங் கலத்தன் மேயினார்.

(இ - ள்.) மையுண்ட நெடிய கண்ணையுடைய மகளிர்தாம் விரும்புதற்குக் காரணமான தந்துணைவருடைய உடல் தெய்வ உணவினை உண்டமையானும், புத்தணிகலன் பூண்ட அழகானும், வேற்றுமையற்றமையான் அவரைத் தெரிந்து கொள்ளமாட்டாது மயங்கிப் பின் அக்கணவர் தம் கைவிரலிலணிந்துள்ள அடையாள மோதிரத்தை அம்மகளிர்க்கு (உண்மை தெரிவித்தற்குக்) காட்டாநிற்பத் தெளிந்து அவரோடு கூடுவாராயினர்.

(வி - ம்.) தெய்வதம் - தெய்வம். வீழ்துணை : வினைத்தொகை.

(90)

 மானிடர் குழுவினை நோக்கி வானவர்
 வானவர் குழுவென மருண்டங் கண்மினார்
 வானவர் குழுவினை நோக்கி மானிடர்
 மானிடர் குழுவென மருண்டங் கண்மினார்.

(இ - ள்.) வானவர் மக்கட் கூட்டத்தைக் கண்டு வானவர் கூட்டமென்று மயங்கி அக்கூட்டத்தை அணுகினர். இங்ஙனமே மக்கள் வானவர் கூட்டத்தைநோக்கி மக்கட்கூட்டமென்று மயங்கி அக்கூட்டத்தை அணுகலானார்.

(வி - ம்.) அண்மினார் - அணுகினர்.

(91)

 ஈட்டலு மடுத்தலு மின்மை யால்வரைத்
 தோட்டுணை மைந்தருந் தொடிக்கை மாதரும்
 கூட்டுணு மிழையணிந் தகற்றிக் கோலமெய்
 மீட்டுமீட் டணிதலே வினைய தாக்கினார்.

(இ - ள்.) தம்முட்கூடி யின்பநுகரும் மலைபோன்ற தோள்களை யுடைய மைந்தரும், வளையலணிந்த கையையுடைய மாதரும், பொருளீட்டு தலும் உணவுசமைத்தலுமாகிய பிறதொழில்கள் தமக்கில்லாமையால் எப்பொழுதும் ஆடையணிகலன்களை அணிதலும் அவற்றைக் களைதலும் மீட்டு மீட்டு அணிதலுமே தங்கள் செய்தொழிலாகக் கொண்டனர்.

(வி - ம்.) ஈட்டல் ஆடவர் மேற்று ; அடுதல் மகளிர் மேற்று. அடுதல் - உணவு சமைத்தல். கூட்டுணும் மைந்தருமகளிரும் என்க.

(92)