பக்கம் எண் :

1292தணிகைப் புராணம்

 ஆடினார் பலரரங் கேறி யாழ்தழீஇப்
 பாடினார் பலர்களம் பயின்று பாரிடை
 நீடுவார் குழலியர் நிகர வேண்டிவிண்
 கூடுவா ரிளமுலைக் கோலக் கொம்பனார்.

(இ - ள்.) வானவர் நாட்டிற் பொருந்துமியல்புடைய கச்சணிந்த இளைய முலையினையுடைய அழகிய பூங்கொம்புபோன்ற அமரர்மகளிர், நிலவுலகத்துமகளிர்க்கு ஒப்பாதல் வேண்டிப் பலர் ஆடலரங்கிலேறிக் கூத்தாடினர். வேறுபலர் பாட்டரங்கத்தே சென்று இனிய யாழிசையோடு இயையும்படி பாடுவாராயினர்.

(வி - ம்.) விண்கூடும் மகளிர் வார்இளமுலை மகளிர் கோலக்கொம் பனைய மகளிர் என்று இயைத்துக் கூறுக          .

(93)

 கார்விளை யாடிய காமர் மின்னனார்
 தார்விளை யாடுதோட் டலைவர் தம்மொடு
 நீர்விளை யாடிநீள் பொழிலி னாடியுள்
 ளூர்விளை யாடியு முவப்பு மிக்கனர்.

(இ - ள்.) இனி, முகிலிலே பாயாநின்ற அழகிய மின்னலை ஒத்த மானிடமகளிர் மலர்மாலை அசைந்தாடுந் தோளினையுடைய தங்கணவன் மாரொடு நீர்விளையாட்டயர்ந்தும், நீண்ட பொழிலின்கண் விளையாட் டயர்ந்தும் உள்ளூரின்கண் விளையாட்டயர்ந்தும் மகிழ்ச்சி நிரம்பினர்.

(வி - ம்.) காமர் - அழகு. தார் - மாலை.

(94)

 வந்தவ ரகமனை வதிய வைகுநர்
 வந்தவர் போற்புறம் வதிதன் மேயினார்
 அந்திலுள் புறமென வறைவ தல்லதை
 எந்திட முஞ்சிறப் பொப்ப வேய்ந்தவே.

(இ - ள்.) வேறிடத்திருந்து திருமணங் காணவந்த விருந்தினர் ஆண்டுள்ள இல்லங்களினகத்தே புக்குறையாநிற்ப, இல்லங்கட்குரியோர் விருந்தினர் போன்று இல்லத்தின் புறத்தே உறைவாராயினர். உள்ளிடம் புறவிடம் என்று கூறு மாத்திரையேயன்றி உள்ளும் புறமுமாகிய எல்லா இடங்களும் இப்பொழுது ஒத்த
சிறப்புடையனவேயாயின.

(வி - ம்.) வந்தவர் - வேறிடத்திருந்து வந்தோர். வைகுநர் - இல்லத்திற் குரியோர். அந்தில் : அசை. எந்தவிடமும் எந்திடமும் என்று விகாரமுற்றது.

(95)

 கண்ணிணை யெழுதினர் கவிழ்த்த வஞ்சனம்
 தண்ணிய முலையணிந் துகுத்த சாந்தமும்
 வண்ணமென் மலரடி யிழுக்கன் மாண்புதேர்
 விண்ணவர் மண்ணடி மிதித்த னீவினார்.