பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1293

(இ - ள்.) இணைவிழிகட்கு மையெழுதியவர் சிந்திய மையும் ; முலைமிசை அணிந்தகாலத்தே சிந்திய குளிர்ந்த சந்தனமும், நிறமுடைய மெல்லிய மலர்போன்ற தம்முடைய அடிகள் இழுக்கச் செய்யும் தன்மையை உணர்ந்த தேவர் நிலத்தின்மேல் மிதித்தலை ஒழித்தனர்.

(வி - ம்.) அஞ்சனம் - மை. சாந்தம் - சந்தனம். மாண்பு - தன்மை என்பதுபட நின்றது.

(96)

 கொன்மணி நகரமு மாதர் கோலமும்
 மென்மெலப் பழகிய விழிகள் கண்டன
 அன்மலி மின்னொளி யழுந்தி நின்றெனப்
 புன்மையின் மிக்கன புதுமைக் கண்களே.

(இ - ள்.) பெருமைமிக்க மணிகளால் ஒப்பனை செய்யப்பட்ட நகரத்தையும் அதன்கண் மகளிருடைய ஒப்பனைகளையும் மெல்ல மெல்லப் பார்த்துப் பார்த்துப் பழகிய விழிகள் ஒருவாறு கண்டன. அங்ஙனம் பழகாமல் பொள்ளெனக் காணும் புதுமையுடைய விழிகள் இரவின்கண் மிக்க மின்னல் ஒளியிலே அழுந்திய விழிகளைப்போன்று குருட்டுத்தன்மை மிக்கனவாயின.

(வி - ம்.) கொன் - பெருமை. அல் - இரவு. புன்மை, ஈண்டுக் குருட்டுத்தன்மை.

(97)

 வரைகளும் வரைப்பெருங் குவடு மாமலர்
 விரைசெலும் பொழில்களுங் கழித்து வீசிய
 புரையொளி யிழைகொடு பொலிந்த தாங்களும்
 கரைமணங் காணிய கவின்கொண் டாலென.

(இ - ள்.) பக்கமலைகளும், மலைக்குவடும் சிறந்த மலர் மணம் பரவும் பூம்பொழில்களும் மகளிர் அணிந்து கழித்து வீசியெறிந்த உயரிய ஒளியுடைய அணிகலன்களைத் தம்மேலேற்றுக் கொண்டு தாங்களும் ஆரவாரமுடைய திருமணவிழாக் காண்டற் பொருட்டு ஒப்பனை செய்துகொண்டாற் போன்று
பொலிவுற்றன.

(வி - ம்.) விரை - மணம். புரை - உயர்வு. கதை - ஆரவாரம். கவின் - அழகு.

(98)

 பாறயி ரிழுதுதேன் பசுங்க ழைப்புனல்
 ஆறென வொழுகநன் றாடிப் பூசுபு
 நாறுமென் களபநல் லணிக டாங்குபு
 வீறுய ருணவெலா மிசைந்த வீதியே.

(இ - ள்.) வீதிகள் பாலும் தயிரும் நெய்யுந் தேனும் பசிய கருப் பஞ்சாறும் யாறுபோன்று ஒழுகுதலானே நன்றாகக் குளித்தும் பூசிக் கொண்டும் மணங்கமழும் குங்குமச்சாந்தினையும் நல்ல அணிகலன்களையும் அணிந்து கொண்டு மிகவுயர்ந்த உணவுகளை யெல்லாம் உண்டன.