பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1297

(வி - ம்.) நிலைத்தோர் - தேர்போன்று நிலையாகச் செய்த தொரு ஒப்பனைத் தேர். கறுத்து - சினந்து. ஒருவரை - கிரௌஞ்சம்.

(109)

 பிலிற்றுதண் மதுப்பொழிற் பொருப்பின் சேணெலாம்
 இலிற்றுமும் மதக்களி றெண்ணி லாதன
 வெளிற்றறி வினர்பொறி விழையச் செல்லுமால்
 குளிற்றுவண் முரசினர் குழாம்வி லங்கவே.

(இ - ள்.) முழங்குகின்ற வளவிய முரச முடையோர் வழியிலுள்ள கூட்டத்தை விலக்கிமுன் செல்லாநிற்பக் குளிர்ந்த தேனைச் சொரிகின்ற பொழிலையுடைய அம்மலையின் பக்கமெங்கும் மூன்றுவகை மதங்களையும் பொழியாநின்ற எண்ணிறந்த களிற்றியானைகள் பேதை மாக்களின் ஐம்பொறிகளும் போன்று பாகர்க்கடங்காமல் செல்லாநிற்கும்.

(வி - ம்.) பொருப்பு - தணிகைமலை. இலிற்றுதல் - பொழிதல். வெளிற்றறிவு - பேதைமை. விழைய - உவமவுருபு.

(110)

 கலஞ்சிதர்ந் திரும்புவேய் காலி டுந்தொறும்
 நிலஞ்செதி ளெடுத்தவாய் நிரப்ப மாமணிக்
 குலஞ்செறிந் தைங்கதிக் கோணஞ் செல்லுமால்
 பொலஞ்செய்பூ ணினர்மிகாப் புலன்க ணாடியே.

(இ - ள்.) குதிரைகள் தம்மணிகலன்களைச் சிதறச்செய்து இரும்பு இணைக்கப்பட்ட தம் அடிகளையிடுந்தொறும் நிலத்திலே பொருக் கெழுந்த குழிதோறும் தமது அணிகலமணித்திரளை நிரப்பிப் பொன்னாலாய அணிகலனணிந்த குலமகளிருடைய மிகுதலில்லாத பொறி போன்று தமக்குரிய ஐந்துவகைச் செலவாகிய கோணங்களிலே அடங்கிச் செல்லா நிற்கும்.

(வி - ம்.) பூணினர் என்றது குறிப்பான் மகளிர் மேனின்றது. புலன்கள் - பொறிகளின் மேற்று. நாடி - உவமவுருபு.

(111)

 இன்னண மணச்சிறப் பியன்ற பாணியில்
 பொன்னலர்த் தவிசினான் புரையின் மாதவர்
 பன்னிய சமிதைபைந் தருப்பை யாதியின்
 துன்னுற மன்றல்செய் சூழ னண்ணினான்.

(இ - ள்.) இவ்வாறு திருமண விழாச்சிறப்புகள் நிகழ்ந்த பொழுது பொன்னாலாகிய தாமரைமலர் மேலுறையும் பிரமதேவன் குற்றமற்ற பெரிய தவத்தையுடைய முனிவர் கூறப்பட்ட வேள்வி விறகும் பசிய தருப்பைப் புல்லும் முதலிய வேள்விப் பொருள்களோடு தன்னைச் சூழ்ந்து வாராநிற்பத் திருமணவினை நிகழ்த்துதற் குரிய இடத்தினை அடைந்தனன்.

(வி - ம்.) பரணி - காலம். அலர்த் தவிசினான் - பிரமன்.

(112)