பக்கம் எண் :

1302தணிகைப் புராணம்

(இ - ள்.) எம்பெருமான் தனது திருவருட்டிருமேனியை படைத்துக் கோடலாகிய தொழிலுக்கு வினைமுதல் தானேயாவன் (பிறரிலர்) என்னுமுண்மையை உலகத்தோர் அறிந்துகோடற்பொருட் டிடுமாறு, தனது வடிவிலே உருச்செதுக்குதற்குரிய கருவியுந் தானாகவே அமைந்த வச்சிரமணிக் கடகத்தைப் பெரிய கைகளிலே ஏறச்செறித்துப் பின் தனது திருமேனியானே இளமையுடையோனுமாய் அறிவினாலே யாவரினும் முதியனுமாகிய ஒப்பற்ற அப்பெருமானையே ஒத்துத் தனது உருவத்தானே சிறுத்து விலையானே எல்லையற்ற மணிமோதிரத்தைச் செறியவேற்றி.

(வி - ம்.) உருவிற்றொழில் - உருவத்தைப் படைக்குந் தொழில். தெள்ள - தெளிய. முதுக்குறைவு - அறிவு.

(121)

 அரிக்குரற்கிண் கிணிசிலம்புந் தண்டையுஞ்சே
           வடியணிந்து பணிந்தான் கீர்த்தி
 விரிக்குமறு முகவனெழுந் தியமியம்பக்
           கொடிதுவன்ற வீங்கு மல்லைப்
 பொரிக்குமதிக் குடைநிழற்ற வரம்பையர்சா
           மரையிரட்டப் புலவர் சூழப்
 பரிக்குமணிக் கலனிவுளி யிவர்ந்தூர்ந்து
           நகர்வீதி படர்ந்து சென்றான்.

(இ - ள்.) அரித்தெழுங் குரலையுடைய கிண்கிணியுஞ் சிலம்பும் தண்டையுமாகிய அணிகலன்களைச் சிவந்த திருவடிகளிலே பூட்டி எம்பெருமானை வணங்கா நின்றனன். பின்னர் புகழ்பரப்பும் ஆறுமுகப் பெருமான் அவ்வணையினின்றும் எழுந்து இசைக்கருவிகள் முழங்கவும் கொடிகள் நெருங்கவும், பெருகிய இருட்டினை அழிக்கின்ற திங்கள் வெண்குடை நிழற்றா நிற்பவும், அரம்பை மகளிர் கவரி வீசவும், அமரர்கள் புடைசூழ்ந்து வரவும், விரைந்து செல்லும் மணியணிகலனணிந்த குதிரையின் மிசை யேறிச்செலுத்தி அத்திருநகர வீதியின்கண் திருவுலாச்
சென்றருளினன்.

(வி - ம்.) இயம் - இசைக்கருவி. அல் - இருள். பொரித்தல் ஈண்டு அழித்தன்மேற்று. புலவர் - அமரர். இவுளி - குதிரை.

(122)

வேறு

 கொங்குலாம் வீதியி னகருளார் பணிசெயக் கொடுசெலும்
 எங்கணா யகனெதிர் முனிவரர் யாவரு மினிதமை
 பொங்கொளிக் கரகநீர் தூவியா சிகள்புகன் றேத்தினார்
 மங்கைய ரெண்வகை மங்கலங் கொண்டெதிர் வாழ்த்தினார்.

(இ - ள்.) மணங் கமழாநின்ற வீதியின்கண் நகரத்துள்ளோர் திருப்பணியியற்ற உலாக் கொண்டு போகும் எம்பெருமான் திருமுன்னர் முனிவர் எல்லாம் இனிதாக அமைந்துள்ள ஒளிமிக்க கரகங்களிலுள்ள நீரினைச் சிதறி வாழ்த்துப் பாடி வணங்கினர். மகளிர்கள் எண்வகை மங்கலப் பொருள்களையும் ஏந்திக்கொண்டு
வாழ்த்துப் பாடினர்.