பக்கம் எண் :

1304தணிகைப் புராணம்

 விசும்பு மகளிர் முனிவர் மகளிர் விரசிப் பரசித் தொடர
 அசும்பு நறிய மதுமென் கோதை யளகத் திருவண் களபம்
 இசும்புண் முலையிற் றிவளு மறுவை யிளக விறைஞ்சி யெழுந்து
 தசும்பு நிகரு முலைமெல் லியன்முன் றரித்த கோலந் தணத்தாள்.

(இ - ள்.) அத்திருமகள் வானநாட்டு மகளிரும் முனிவர் மகளிரும் தன்னைச்சூழ்ந்து பாராட்டித் தொடராநிற்ப ஊறாநின்ற நறிய தேனையுடைய மெல்லிய மலர்மாலை யணிந்த கூந்தலும், அழகிய வளவிய கலவைச்சாந்து அணியப்பட்டு வழுவழுப்புடைய முலைமேற்றுகிலும் இளகும்படி வள்ளிநாயகியாரை வணங்கி யெழுந்து பின்னர்க் குடத்தை ஒத்த முலைகளையுடைய அவ்வள்ளி நாயகியார் முன்தரித்திருந்த ஒப்பனைகளை எல்லாம் அகற்றினள்.

(வி - ம்.) விசும்பு - வானம். விரசி - கூடி. அசும்பும் - ஊறும். அறுவை - துகில்.

(127)

 நாமா மகளுஞ் சசியு மேவ னயந்து புரிய நறுமென்
 பூமாண் டயில மள்ளி வளைகள் புலம்ப வோதி யுரைத்துத்
 தீமா ணெல்லிக் கனியுண் சாந்து திமிர்ந்து விரையுந் துவரும்
 ஓமா லிகையு முரிஞி யுடல மொளிர மண்ணுச் செய்தாள்.

(இ - ள்.) கலைமகளும் இந்திராணியும் தனது ஏவலை விரும்பிச் செய்யா நிற்ப, நறிய மெல்லிய மலர்களின் மணமேற்றப்பட்டு மாட்சிமை யுடைத்தாகிய எண்ணெயை அள்ளித் தன் வளையல்கள் ஒலிக்கும்படி வள்ளியின் கூந்தலிலே தேய்த்து, இனிமை மாண்புடைய நெல்லிக் கனிச்சாறூட்டப்பட்ட சாந்தினைத் தேய்த்து ஐந்து வகை நறுமணமும் பத்துவகைத் துவரும் முப்பத்திருவகை ஓமாலிகையும் நீவி உடல் திகழும்படி திருமுழுக்குச் செய்வித்தனள்.

(வி - ம்.) நாமகள் - கலைமகள். சசி - இந்திராணி. ஓதி - கூந்தல். உரிஞி - தடவி. மண்ணு - திருமுழுக்கு.

(128)

 ஈரம் வறல நுழைநூற் கலிங்க மேந்தி முழுது முளர்ந்து
 நீரி னனைந்த தூசு களைந்து நிகரில் செம்பட் டுடுத்துத்
 தாரு மணியின் வடமு நான்ற தலனிற் றவிசி னிருவி
 ஒரு மிபத்தின் மருப்புச் சீப்பி னோதி வாரி முடித்தாள்.

(இ - ள்.) ஈரம் புலரும்படி நுண்ணிய நூலானாய துகிலின் ஏந்தி முழுவதும் கோதி, நீரின் நனைந்த ஆடையை அகற்றி ஒப்பற்ற செம்பட் டாடையை உடுத்து மலர்மாலையும் மணிமாலையும் நாலவிட்ட இடத்தி லிடப்பட்ட தோர் இருக்கைமிசை இருக்கச் செய்து, ஆராய்ந்த யானை மருப்புச் சீப்பானே கூந்தலை வாரிமுடித்தனள்.

(வி - ம்.) வறல - வறள. நுழை - நுண்மை. உளர்ந்து - கோதி. தலன் - தலம், இடம். இபம் - யானை.

(129)