பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1305

வேறு

 முழுதுலகுங் கமழ்நானக் கலவைவிரைப்
           புகையூட்டி முறையி னீவிக்
 குழலளகம் வகுத்தமைத்துக் கொண்டையெறு
           ழேற்றிமில்சீர் குறைய வாக்கி
 நிழலுமிழ்நீன் மணிப்பனிச்சை பஞ்சையிணை
           விரித்தியற்றி நிகரி லைம்பால்
 அழகெறிப்ப நித்திலமா லிகைநான்ற
           மணிமகர மமையச் சேர்த்தாள்.

(இ - ள்.) உலகமுழுதும் மணங்கமழ்கின்ற புழுகுக்கலவையினை நறுமணப் புகையினை யூட்டி முறையாகத் தடவிக் கூந்தலைக் குழலாக வகுத்து அமைத்துக்கொண்டு பின்னர் வலிமையுடைய ஆனேற்றின் இமிலினுங்காட்டில் அழகிதாய்க் கொண்டை கட்டி ஒளிவீசும் நீலமணிபோன்ற நிறமுடைய பனிச்சையாகத் துகிலினை இணையாக விரித்து அதன்மேற் கிடத்திக் கட்டி ஒப்பற்ற ஐந்து பகுப்புடைய கூந்தல் மேலும் அழகுதிகழ்தற்கு முத்துமாலை தூங்காநின்ற மணியாலியன்ற மகரம் என்னும் அணியை அணிந்தனள்.

(வி - ம்.) நானம் - புழுகு. விரை - நறுமணம். இமில் - கொண்டை. நீல் - நீலம். பஞ்சு - துகில். பனிச்சை : ஐம்பாலில் ஒன்று.

(130)

வேறு

 தூநறுங் குவளைப் போது தொடிக்கையி னெரித்து வாங்கித்
 தேனறு வேங்கை நாறுந் தீங்குழற் செருகி முல்லைப்
 பூநறுந் தொடையன் முச்சிப் புறங்குலா யீழப் பைந்தார்
 கானறுங் கதுப்புச் சுற்றிற் காருமிழ் மின்னிற் சூழ்ந்தாள்.

(இ - ள்.) தூய்தாகிய நறிய குவளைமலரை வளையலணிந்த தன் கையாற் பறித்து நெரித்தலர்த்தி தேன்றுளிக்கும் நறிய வேங்கைப்பூ மணம் நாறாநின்ற இனிய குழலின்கண் செருகிப் பின்னர் முல்லைப் பூவாலாய நறுமணமிக்க மாலையினை உச்சியின் பக்கத்தே கட்டி பொன்னாலியன்ற பசிய மாலையினை மணங்கமழும் கூந்தற் சுற்றின்கண் முகில் வீசாநின்ற மின்னல் போன்று சுற்றினள்.

(வி - ம்.) போது - மலர். தொடி - வளையல். முச்சி - உச்சி. ஈழம் - பொன். கான் - மணம்.

(131)

 முழுதெழிற் றிறத்தா னோற்ற முதன்மையாற் றன்னைத் தாழ்த்த
 பழுதிலாள் சென்னித் தன்போற் பயிற்றிய தெய்வ வுத்தி
 வழுவிய பிறையுஞ் சூட்டாண் மயில்வலம் புரியுந் தாழ்த்தாள்
 ஒழுகொளிப் பிறைமா மஞ்ஞை யுறுத்தின ளுறுவ தோர்ந்தே.