பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1309

(இ - ள்.) மலராநின்ற தாமரைப் பூவிற்கு நண்பனான ஞாயிற்றுத் தேவன் ஏறிய முறுக்கு விடாநின்ற தாமரைப் பூவினை அழகானே மெலியச் செய்கின்ற வள்ளிநாயகியாரின் அழகிய கையினை வருத்தத்தோடு எய்தி அங்ஙனம் நலியற்க என்று வேண்டி நின்றாற்போன்று, ஒளிவீசும் மணியழுத்திய கடகத்தையுடைய முன்கையில் வளையலினத்தைச் செறியப்பூட்டி, விரல்கள்தோறும், ஆராய்ந்தெடுத்த மணிமோதிரங்களைச் செருகினள்.

(வி - ம்.) கஞ்சப்பூ - தாமரைப்பூ. கஞ்சநண்பன் - ஞாயிறு. இது கடகம் வளை மோதிரம் என்னும் இவற்றின் ஒளிப்பிழம்பிற்கு உவமை எனப் பொதுவிற்கொள்க.

(140)

 குளிர்பனி நீரிற் சேர்த்துக் குங்குமக் கலவை கொட்டி
 ஒளிமணி தகர்த்த சுண்ண முறுபுகை யப்பி யூட்டித்
 துளிமதுத் தொங்கல் பொற்றார் சுடர்மணி மதாணி மற்றும்
 தெளிகதிர் முத்த மாலைத் திரளொடு நவினப் பூண்டாள்.

(இ - ள்.) குளிர்ச்சி மிக்க பனிநீரிலே குங்குமக்கலவைச் சாந்தினைச் சேர்த்துத் திருமேனியிற்றிமிர்ந்து, மேலும் ஒளியுடைய மணிகளைத் துகள்படுத்த சுண்ணத்தையும் அப்பி மிக்க நறுமணப்புகையினை யூட்டிப் பின்னர்த் தேன்றுளியா நின்ற மலர்மாலை, பொன்மாலை, சுடரா நின்ற மணியிழைத்த மதாணி என்னுமிவற்றோடு தெளிந்த ஒளியையுடைய முத்துமாலைத் திரளினையும் அழகுற அணிந்தாள்.

(வி - ம்.) சுண்ணம் - பொடி. பூண்டாள் - பூட்டினாள்.

(141)

 முகநிதிக் கமல மீன்ற முத்தமோ களச்சங் கீன்ற
 புகரினித் திலமோ மென்றோட் புனக்கழை சொரிந்த வோகற்
 றகர்முலைக் களிற்றுக் கோட்டுத் தரளமோ வென்னு மாரம்
 திகழ்நகை மணியைத் தாழச் செவ்விபார்த் திருப்ப போந்தே.

(இ - ள்.) இவை வள்ளிநாயகியாரின் திருமுகமென்னும் பதுமநிதியாகிய தாமரையீன்ற முத்தோ? அன்றி, கழுத்தாகிய சங்கீன்ற குற்றமற்ற முத்தோ? அன்றி மெல்லிய தோளாகிய புனத்தின்கண் மூங்கிலீன்ற முத்தோ?, அன்றிக் கல்லைத் தகர்க்கும் முலையாகிய யானைக் கோட்டிற் றோன்றியமுத்தோ? என்று ஐயுறுதற்குக் காரணமான முத்து மாலைகள் திகழாநின்ற ஏனைமணிகளைத் தாழ்த்துதற்குச் செவ்வி பார்த்திருப்பன வாயின.

(வி - ம்.) களம் - கழுத்து. கழை - மூங்கில். ஆரம் - முத்து மாலை.

(142)

 கச்சப வடிவிற் றாகிக் கடலெனப் பரந்து தோன்றி
 வெச்செனத் தாக்கும் வேழ வேந்தின்மத் தகத்தைச் சீறி
 முச்சகம் வணக்கு மாரன் மூரிமான் றேரைத் தாழ்க்கும்
 அச்செழு நிதம்பஞ் சேர்த்தா ளைம்பெயர் பூண்ட காழும்.