பக்கம் எண் :

1310தணிகைப் புராணம்

(இ - ள்.) யாமையின் உருவத்தையுடையதாகிக் கடல்போன்று விரிந்து தோன்றி, வெவ்விதாக மோதாநின்ற ஐராவதயானையின் மத்தகத்தைச் சினந்து மூன்றுலகோரையும் தன்னடிப்படுத்தும் காமனுடைய பெரிய குதிரைபூட்டிய தேர்த்தட்டினையும் அழகாற் சிறுமைப்படுத்தா நின்ற அத்தகைய செழிப்புடைய அல்குலிடத்தே ஐம்மணிக்கோவை என்னும் மேகலையைச் சேர்த்தனள்.

(வி - ம்.) கச்சபம் - யாமை. சகம் - உலகம். நிதம்பம் - அல்குல். காழ் - மணிவடம்; பஞ்சரத்னவடம்.

(143)

 மேருவு மேருச் சென்னித் துருவனும் வெளியு மாங்குச்
 சாருடுத் திரளுத் தூநீர்த் தடத்திடை நிழற்றிற் றென்ன
 வாருறு முலையும் வார்ந்த மயிர்மணி யொழுக்கு நள்ளாய்ச்
 சேருநுண் ணுசுப்பு மல்குற் செறித்தபல் காழுந் தோன்றும்.

(இ - ள்.) மேருமலையும், அம்மேருவின் உச்சியிற்றிகழும் துருவமீனும் வானவெளியும் அவ்வெளியினைச் சார்ந்த விண்மீன் கூட்டமும், ஒரு தூய நீர்நிரம்பிய நீர்நிலையிற் றோற்றினாற்போன்று, நிரலே கச்சணிந்த முலையும் நீண்ட நீலமணிபோன்ற நிறமுடைய மயிரொழுங்கு நடுவேயுள்ள நுண்ணிய இடையும் அல்குலிடத்தே சேர்த்த ஐம்மணிக்கோவையும் தோன்றாநிற்கும்.

(வி - ம்.) மேரு - முலைக்கும், துருவமீன் மயிரொழுங்கிற்கும், வெளி இடைக்கும், உடுத்திரள் மணிவடத்திற்கும் உவமைகள். வள்ளிநாயகியார்க்குத் தூநீர்த்தடம் உவமை என்க.

(144)

 கிம்புரி வடிவின் மின்னுங் கிளர்மணிச் செறிகை பற்றிக்
 கம்பமால் களிநல் யானைப் பிணர்படு காமர் கையும்
 உம்பர்வா னோக்கும் வாழை யுருவமும் வறிய வாக்கிச்
 செம்பொன்வார் கலையிற் பட்டிற் றிகழ்குறங் கணிதல் செய்தாள்.

(இ - ள்.) கிம்புரி என்னும் தோளணிகலத்தின் வடிவினவாய் மின்னாநின்ற ஒளிமிகுந்த மணியாலியன்ற குறங்கு செறியென்னும் அணிகலனைக் கைக்கொண்டு தறியிற்பூட்டப்படும் பெரிய களிப்பினையுடைய யானையினது சருச்சரையையுடைய அழகிய துதிக்கையும், உயர்ந்த வானோக்கி வளர்ந்த இளவாழையின் உருவமும் அழகற்றனவாம்படி செம்பொன்னாலியன்ற பொன்னாடையானும் பட்டாடையானும் திகழாநின்ற துடைகளை அணிசெய்தனள்.

(வி - ம்.) குறங்கு செறி என்னும் அணிகலனால் குறங்கினை அணி செய்தாள் என்க.

(145)

 சில்லரிச் சிலம்பு செம்பொற் கிண்கிணி பாத சாலம்
 புல்லிய பரடு கவ்விப் புலம்புற வணிந்து வார்ந்த
 நல்லெழில் விரன்ம னாவி னகைமின்னுச் செறியு ளாக்கி
 வில்லுமிழ் பட்டின் றோக்கை மேதக விரீஇயி னாளே.