பக்கம் எண் :

1312தணிகைப் புராணம்

 முந்தறி யாத காமர் முதிர்ந்தவென் றயிர்த்து நொந்தாள்
 அந்தின்மற் றிருந்தோர் தாமு மயிர்த்தன ருயிர்த்து நின்றார்.

(இ - ள்.) இவ்வாறு வள்ளிநாயகியார்க்கு ஒப்பனை செய்த செவ்விய திருமகள் அவ்வம்மையாரைக் கூர்ந்து நோக்கி ஈதென்ன வியப்பு! இவ்வணிகலன் அனைத்தும் முன்னர் எம்மாலணியப்பட்டு எமக்கு அழகாக்கம் செய்தவைகளே ; யாம் அவற்றை இவட்கு ஒப்பனை செய்தேம் இப்பொழுது, யாமுன் இவற்றின்பாற் கண்டறியாத புத்தழகிலே இவை முதிர்ந்து தோன்றுகின்றன என்று ஐயுற்றுத் தன்னுள்ளே சிறிது வருந்துவாளாயினள். அவ்விடத்தே இந்திராணியையுள்ளிட்ட ஏனைமகளிரும் அங்ஙனமே ஐயுற்று நொந்து பெருமூச்செறிந்து நின்றனர்.

(வி - ம்.) மகளிர் ஏனைமகளிரின் அழகாக்கம் கண்டுழி சிறிது அழுக்காறும் வருத்தமும் எய்துதல் இயல்பென்பது இந்நூலாசிரியர் கொள்கை என்று தோன்றுகின்றது.

(149)

 ஆடவர் திலக னான வமரருக் கமரன் வார்வில்
 வேடர்தங் காளை யாகி வேங்கையாய் நிழற்றிச் சால
 வாடின னடியில் வீழ்ந்த மரபெலாந் தகவே யன்றோ
 ஈடரு மயிலின் சாய லிவள்கடைக் கணித்தற் கென்றார்.

(இ - ள்.) ஆண்மையாளர்க்கெல்லாம் திலகனாகியவனும் தேவ தேவனுமாகிய முருகப்பெருமான், ஒப்பற்ற மயில்போன்ற இனிய சாயலை யுடைய இந்நங்கையினது கடைக்கணோக்கம் பெறுதற்கு நெடிய வில்லையுடைய வேட்டுவ விளைஞனாகியும் வேங்கை மரமாகி நீழல் செய்தும் பெரிதும் நலிந்து இவளது அடிகளிலே வீழ்ந்த செயல் எல்லாம் தகுதியுடையனவேயாகும் என்று
பாராட்டினர்.

(வி - ம்.) வேங்கை - ஒருமரம். வாடினன் : முற்றெச்சம்.

(150)

 பெண்மையாற் பெண்க ளெல்லாம் பெருந்தவ மாற்றி யாண்மை
 வண்மையாற் கோடு மென்ன மதிநனி யுடற்றுங் கற்பின்
 திண்மையா ளன்னை யான செய்தியா லெவர்க்கு மாண்மை
 உண்மையா னஃதன் றாயி னுரையொடுங் கெடுவ தென்றார்.

(இ - ள்.) தமது பெண்மை நலத்தாலே ஏனைமகளிர் எல்லாம் தம் பெண்மையை வெறுத்துப் பெரிய தவத்தினைச்செய்து அத்தவப் பயன் கொடுத்தலானே ஆண்மைத் தன்மையை எய்தியேனும் இப்பழியினின்று விலகுவேம் என்று கருதி உளம் பெரிதும் வருந்துதற்குக் காரணமான கற்பின் திண்மையுடைய இந்நாயகியார் உயிர்கட்கெல்லாம் தாயாகத் தோற்றமளிக்குங் காரணத்தானே உலகில் ஆடவர்க்கும் ஆண்மைப்பண்பென்பது உளதாயிற்று ; அங்ஙனமின்றேல் அவ்வாண்மை என்பது தன் பெயரோடு ஒருசேரக் கெட்டொழிவதாம் என்று வியந்தனர்.