பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1313

(வி - ம்.) அன்னையான செய்தி என்றது தன்னைக் காணுமுயிர்க் கெல்லாம் தாயாகவே தோன்றுமொரு தெய்வத்தன்மை. உரை - பெயர்.

(151)

 நாரணன் மார னேனோர் நலத்தகு தன்மு னீங்கின்
 சீரணி யழக ராகுஞ் செறிவனப் புடைய நம்பி
 வாரணி முலையாட் கொத்தான் மங்கையர் யாருந் தன்முன்
 ஏரணி யில்லா ராகு மிவளவற் கொத்தா ளென்றார்.

(இ - ள்.) திருமாலும் காமனும் இன்னோரன்ன பிறதேவரும் தன் முன்னிலையின்றும் நீங்கியபொழுது புகழணிந்த அழகுடையராதற்குக் காரணமான செறிந்த பேரழகினையுடைய நம்பெருமான் கச்சணிந்த முலையினையுடைய இவட்கு ஏற்றவனாயினன் என்றார் ஒருசிலர், அது கேட்ட வேறு சிலர், எத்தகைய அழகுடைய மகளிரும் தன் முன்னிலையில் வந்துழி எழுச்சியுடைய அழகினையில்லாத வறியராதற்குக் காரணமான இந்நங்கையும் அந்நம்பிக்கு மிகவும் ஏற்றவளே கண்டீர் என்றனர்.

(வி - ம்.) ஞாயிற்று மண்டிலத்தின் மருங்குற்ற திங்கள் மண்டிலம் ஒளியற்றதாமாறு போன்று முருகன் முன்னிலையில் அமரரும் வள்ளி முன்னிலையில் ஏனை மகளிரும் அழகிலராகுவர் என்றவாறு.

(152)

 அழகினி னிளமைக் காழ்ப்பி னழிவிலா யுதத்திற் காப்பின்
 விழைவருள் கவிகை மாண்பின் வீரத்திற் கல்விச் சால்பின்
 முழுவலி யிருள்கால் சீக்கு முதன்மையி னிகரில் லானைத்
 தொழுமண வாள னாக்குஞ் சுந்தரி தவம்யா தென்னா.

(இ - ள்.) அழகுப்பேற்றானும், இளமைச் செறிவினாலும் தோலாத வெற்றியுடைய படைக்கலனுடைமையானும், பாதுகாவற் றொழிலானும், கல்வி நிறைவானும், முதிர்ந்த வலிமையுடைய ஆணவமலமாகிய இருளினை அகற்றும் தலைமைத் தன்மையானும், ஒப்பற்றவனாகிய நம் பெருமானைத் தான் தொழுகின்ற கணவனாகக் கொள்ளாநின்ற இவ்வழகிய வள்ளிநாயகி சுந்தரியாயிருந்த தனது முற்பிறப்பிற்செய்த தவந்தான் எத்தகைய மாண்புடையதோ என்று வியவாநின்றனர்.

(வி - ம்.) காழ்ப்பு - செறிவு. காப்பு - காத்தற்றொழில். முழு வலியிருள் - ஆணவமலம். சுந்தரி - வள்ளி நாயகியாரின் முற்பிறப்பு.

(153)

வேறு

 சிந்தா மணியே தெய்வத் தருவே
 கொந்தார் தருவிற் குலவுங் கொடியே
 அந்தா மரைசங் கெனுமா நிதியே
 நந்தா வொளியே நறையே யமுதே.