| திசையினும் கீழ்த்திசையினுஞ் சென்று முடிவுறும்படி கோடுகளைக் குறுக்காகவும் நெடுக்காகவும் கிழித்தனன். (வி - ம்.) மூத்த நூல் - வேதம். நாந்திமுகம் - ஒரு சிராத்தம். பாத்தியம் அர்க்கியம் ஆசமனம் என்னும் மூன்றும் என்க. தெற்கே தொடங்கி வடசார் முடியவும், மேற்கே தொடங்கிக் கீழ்சார் முடியவும் கோடுகள் கிழித்து என்றவாறு. அந்திப்ப-முடிய. வார்த்தான்-வரைந்தான். (161) | | இழைத்துவிட் டரத்தை நாப்ப ணிருத்திப்பூத் திருநீர் தோய்ந்த | | | தழைத்தபா சொளியின் மேனித் தயங்கிழைச் சத்தி யோடு | | | மழைத்தட நாற்கை முக்கண் வயங்குசெவ் வுருவி னானை | | | உழைத்தவி சளித்து றுத்தி யுவப்புறப் பூசை செய்தான். |
(இ - ள்.) பின்னர் அக்குண்டத்தின் நடு மேகலையாகிய விட்ட ரத்தை இயற்றிவைத்து மலரிட்டு அழகிய நீர் தோய்ந்த பச்சைமாமேனியையும், விளங்கும் அணிகலன்களையும் உடைய சுவாகா தேவியுடனே முகில் போன்ற பெரிய நான்கு கைகளையும் மூன்று விழிகளையும் உடைய திகழா நின்ற செம்மேனியையுடைய தீக் கடவுளையும் பக்கத்தே இருக்கையமைத்து அவற்றில் எழுந்தருளப் பண்ணி அவர் மகிழும்படி பூசை செய்தனன். (வி - ம்.) சுவாகாதேவி - அக்கினிக் கடவுளின் மனைவி. செவ்வுரு வினன் - அக்கினி தேவன். (162) | | அரணியின் ஞெலிந்த வங்கி யரதனக் கலத்தி லாக்கி | | | இரணவல் லரக்கர் சாய வெடுத்ததில் வறிது போக்கி | | | வரமுறப் பார்த்து விந்து வயங்கமிழ் தெடுத்து வைத்துப் | | | பரவுறப் படுத்து முக்காற் பாணியிற் கொட்டிச் சூழ்ந்தான். |
(இ - ள்.) தீக்கடைகோலாற் கடைந்த நெருப்பினை மணிக்கலத்தி லேந்தி அந்நெருப்பின்கண் ஒரு சிறிது எடுத்துக் கடமையுடைய வலிய அரக்கர் ஒதுங்கும்படி ஒருபால் வாளா போகட்டுப் பின் அந்நெருப்புத் தூய்மையுறும்படி கண்ணோக்கி அதனின்றும் வீரியமாகிய விளங்கா நின்ற அமிழ்தினைக் கற்பனையாலே எடுத்து வைத்துக்கொண்டு அந்நெருப்பினைப் பரப்பி வைத்து மூன்று முறை கைகளைக் கொட்டிச் சுற்றினான். (வி - ம்.) அரணி - தீக் கடைகோல். அங்கி - தீ. இரணம் - கடமை. சாய - ஒதுங்க. பாணி - கை. (163) | | மாசறு மங்கி செங்கை மறித்தனன் வளைத்துப் பற்றி | | | நாசியிற் பூர கத்தா னடத்திவிந் துவினாங் குள்ள | | | தேசொளி யோடுங் கும்பித் துந்தியிற் செலுத்தி யங்கண் | | | வீசொளி விராய்வி டுத்து விளங்கவுற் பவமுள் வைத்தான். |
|