| (இ - ள்.) தூய்மை செய்தமையாலே குற்றந்தீர்ந்த அந்நெருப்பினைச் சிவந்த கையை மடக்கி வளைத்துப் பற்றிக் கொண்டதாகப் பாவனை செய்து அத்தீயினைத் தனது நாசியிலே பூர்கத்தாலே செலுத்தி அந் நெருப்பின் கண்ணுள்ள விந்துவோடு ஆங்கு இருதயத்துள்ள நெருப்பினோடுங் கூட்டிக் கும்பகஞ் செய்து பின்னர் உந்தியின்கட் செலுத்தி ஆண்டுள்ள ஒளி வீசா நின்ற நெருப்போடு கலப்பதாய்ப் பாவித்து மீண்டும் அதனை வாங்கிக் கலத்திலிட்டு அந்நெருப்பின்கண் கருவினைப் பாவனையாலே உண்டாக்கினன். (வி - ம்.) ஆங்குள்ள தேசொலி என்பது இருதய நெருப்பை. அங்கண் வீசொளி என்றது உந்தியின்கண் ணெருப்பினை. உற்பவம் என்பது கருக்கோடலை. (164) | | அருச்சனை நிரப்பித் தெய்வ வான்முலை யமிழ்தம் பாய்த்தித் | | | திருத்தக வளைத்துக் காவல் செய்துமீட் டருச்சித் தங்கி | | | கரத்தினி தேந்தி முக்காற் காமரு குண்டஞ் சுற்றி | | | இருத்துபு முழந்தாள் பூமி யெதிருற வகத்தி னிட்டான். |
(இ - ள்.) பின்னர் அருச்சனை செய்து முடித்துக் கடவுட் பசுவின் பாலினையூட்டித் திருத்தகுதியுறும்படி நான்கு திசையினும் வளைத்துக் காப்பிட்டு மீண்டும், அருச்சனை செய்து மணிக்கலத்திருந்த நெருப்பினைக் கையிலே இனிதாக ஏந்தி மும்முறை விரும்புவதற்குக் காரணமான ஓம குண்டத்தைச் சுற்றித் தன்னிரு முழங்காலும் பூமியிலே பொருந்தும்படி வைத்து அந் நெருப்பினைத் தன்னெதிரே தோன்றும்படி கலத்தைக் கவிழ்த்து ஓமகுண்டத்தின்கட் பெய்தனன். (வி - ம்.) ஆன்முலையமிழ்தம் - பால். இருத்துபு - இருத்தி. தன்னெதிர் அந்நெருப்புத் தோன்றும்படி கலத்தைத் தனக்கெதிராகக் கவிழ்த்து என்றவாறு. (165) | | வடகிழக் கெல்லை சென்னி வைத்தனன் பள்ளி கொண்ட | | | கடவுளாற் சத்தி குக்கிக் கதிர்த்தவீ ரியமாய்ப் புக்குச் | | | சுடரெரி கருப்பங் கொள்ளத் தொடங்குபு கருப்பா தானம் | | | நடுவன முறையி னாற்றி நாமமு நல்க விட்டான். |
(இ - ள்.) ஈசானதிக்கின்கண் தலையை வைத்துப் பள்ளிகொண்டுள்ள சிவபெருமானால் சத்தியின் வயிற்றின்கண் ஒளியுடைய வீரியமாகப் புகுந்து அந்நெருப்புக் கருவாகா நிற்பக் கருப்பாதானந் தொடங்கி இடையிலுள்ள புஞ்சவனம், சீமந்தம், உந்நயன முதலிய சடங்குகளையும் நூன்முறைப்படி செய்து இறுதியாகச் (சிவாக்கினி என்னும்) நாம கரணமுஞ் செய்தனன். (வி - ம்.) பள்ளிகொண்ட கடவுள் சத்தி என்றது இறைவனையும் இறைவியையும். இவர்கள் சிவாக்கினிக்குத் தந்தையும் தாயுமாவர் என்க. நடுவன - கருப்பாதானத்திற்கும் நாமகரணத்திற்கும் இடையிலுள்ள பும்சவனம் முதலிய சடங்குகள். (166) |