| | வளர்சிவ வங்கி யீன்ற வரதரை யலர்க டூய்த்தன் | | | உளமலர்க் கமலத் தாக்கி யருக்கிய வுதகந் தூவித் | | | தளைசெய்மே கலைநாற் பாலுந் தருப்பைகள் பரப்பிக் கஞ்சன் | | | துளவின னரன னந்தற் றோற்றினன் கீழ்சா ராதி. |
(இ - ள்.) பின்னர் இவ்வாற்றால் வளரா நின்ற சிவாக்கினியை ஈன்றருளிய அம்மையப்பரைப் பிரமதேவன் தனது நெஞ்சத் தாமரை மிசை எழுந்தருளப் பண்ணி மலர்கள் தூவி அருக்கிய நீர் தெளித்துப் பின்னர் கட்டுதலமைந்த ஓமகுண்டத்து மேகலையினது கீழ்த்திசை தொடங்கி நாற்றிசையிலும் தருப்பை பரப்பி நிரலே பிரமதேவன் திருமால் உருத்திரன், அநந்தேசுவரன் என்னும் நால்வரையும் எழுந்தருளப் பண்ணி, (வி - ம்.) வரதர் - அம்மையப்பர். உதகம் - நீர். கஞ்சன் - பிரமன். துளவினன் - திருமால். அனந்தன் - அனந்தேசுவரன். (167) | | பரிதியங் குறுத்தி மேலாற் பண்ணவர்க் கிறைமுன் னோரை | | | விரவுறு தத்தந் திக்கின் மேதக விருத்தி நெய்தூங் | | | கருவியை யிழுதைத் தூய்மை கண்டழ லிதயப் போதில் | | | பரமனைப் பயிற்றிப் போற்றி யாகுதி பல்ல செய்தான். |
(இ - ள்.) பரிதி என்னும் மூன்றாமேகலையைச் செய்து அதன் மேலாக இந்திரன் முதலிய எட்டுத் திசை காவலர்களையும் அவரவர்க்குரிய திசையின்கண் மேன்மையுண்டாக இருத்திப் பின்னர் நெய்தூவுதற்குரிய சுருக்குச் சுருவங்களாகிய துடுப்புகளையும் நெய்யையும் தூய்மை செய்து அச்சிவாக்கினியின் நெஞ்சத்தாமரையின்கண் பரமசிவனை எழுந்தருள்வித்து வணங்கிப் பலவாகிய ஆகுதிகளையும் செய்தனன். (வி - ம்.) பரிதி - மூன்றாமேகலை. பண்ணவர் - தேவர். தூம் - தூவும். கருவி - சுருக்குச் சுருவங்கள். பல்ல - பல. (168) | | அங்கியின் மேல்பா லிட்ட வாதனத் திருத்தித் தூசு | | | கொங்கலர் மனுவி னல்கி யிடையிடை குறித்த வோமப் | | | பொங்கெரி வளர்ப்ப நம்பி பூவைத னிதயந் தொட்டான் | | | சங்கர னுமையென் றுன்னித் தகுமது வருக்க மேற்றான். |
(இ - ள்.) இவ்வாறாக ஓம்பப்பட்ட அவ்வேள்வித்தீயின் மேற் றிசையிலே இடப்பட்ட இருக்கையின்மீது மணமக்களாகிய முருகப் பெருமானையும் வள்ளிநாயகியாரையும் இருக்கச் செய்து அவர்க்குத் திருமணக்கூறையும் மணங்கமழும் மலர்மாலைகளும் மந்திர மோதிக்கொடுத்துப் பிரமதேவன் இடையிடையே முற்கூறிய பொங்குதலை யுடைய வேள்வித் தீயினை வளர்ப்புழி முருகப்பெருமான் வள்ளிநாயகியாரின் நெஞ்சத்தைத் தன் திருக்கையானே தொட்டருளினன். பின்னர்ச் சிவபெருமானும் உமையம்மையாரும் வழங்குவதாகப் பாவித்து மது வருக்கத்தை ஏற்றருளினன். |