பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1321

எடுத்து வள்ளியாருடைய திருக்கழுத்திற்றேவதுந்துபி முழங்காநிற்பப் பூட்டியருளினன். அவ்வளவில் பிரமதேவனும் வேள்விச் செயலை விளங்கச் செய்து முடித்தனன்.

(வி - ம்.) மிடறு - கழுத்து. அங்கிவினை - வேள்வித் தொழில்.

(172)

 ஆர்த்தன பணில மாதி யாடின கணங்க டுள்ளித்
 தூர்த்தனர் சுரர்பூ மாரி சுரந்தன துதியின் சும்மை
 போர்த்தனன் புளகம் வேடன் பொடித்தன வுவகை யார்க்கும்
 தீர்த்தனுங் கருணை கூர்ந்தான் றேவியு மகிழ்ச்சி பூத்தாள்.

(இ - ள்.) அப்பொழுது மங்கலச் சங்க முதலிய இசைக் கருவிகள் ஆரவாரித்தன. சிவகணத்தோர் உவகையாலே துள்ளிக் கூத்தாடா நின்றனர். தேவர்கள் மலர்மழையாலே உலகைத் தூர்த்தனர். வாழ்த்தொலி பெருகின. வேடர்வேந்தன் உடல்புளகம் போர்த்தனன். எல்லோருக்கும் மகிழ்ச்சி பொங்கின. சிவபெருமான் திருவருள் கூர்ந்தருளினார்; உமையன்னையாரும் உவகையாற் பொலிவுற்றனர்.

(வி - ம்.) பணிலம் - சங்கு. சும்மை - முழக்கம். தீர்த்தன் - சிவபெருமான். தேவி - உமை.

(173)

 வெடர்கோ னீரி னல்க வேலவ னேற்ற லோடும்
 ஆடில விமைக ணீழ லளித்தில துருவ மாலை
 வாடில குழலின் வண்டு மருவில நுதலின் வேர்வை
 கூடில மாசு தூசு கொண்டில மாத ராட்கே.

(இ - ள்.) வேடர்வேந்தன் நீர்வாக்கி வழங்க எம்பெருமான் ஏற்றருளிய பொழுதினின்றும், வள்ளிநாயகியார்க்குக் கண்ணிமைகள் இமைத்தில ; உருவம் நிழலிட்டிலது ; மாலைகள் வாடாதனவாயின. கூந்தலின்கண் வண்டுகள் வீழாவாயின. நெற்றி வியர்த்திலது. ஆடை மாசேறாவாயின.

(வி - ம்.) தெய்வங்கட்கு கண்ணிமையாமை முதலியன உள.

(174)

 பொறிமயிற் புனத்தை யோம்பிப் பூவையைக் கவர்வான் போந்த
 நெறிவயிற் கரந்து நின்ற நிமலனே போலத் தானும்
 கறிவளர் சார னம்மூர்க் கரந்தனள் வளர்ந்தாள் கொல்லோ
 முறியியன் மேனி யென்று முழுதுள மகிழ்ந்தார் வேடர்.

(இ - ள்.) புள்ளிமயில் வாழ்கின்ற தினைப் புனத்தைக் காவல் செய்திருந்த இவ்வள்ளியைக் கவர்ந்து வேடற்கு வந்த வழியில் தன்னை மறைத்துக் கொண்டு வேடனாய் நின்ற முருகவேளைப் போலவே இத்தளிர் போன்ற மேனியையுடைய இவள் தானும் தனது தெய்வ மேனியை மறைத்துக் கொண்டு மிளகு கொடி வளராநின்ற சாரலையுடைய நம்மூரின்கண் நம்பால் நம்மகளாய் வளர்ந்தனள் போலும் என்று வேடரெல்லாம் விம்மிதமுற்றுப் பெரிதும் மகிழ்ந்தனர்.