பக்கம் எண் :

1326தணிகைப் புராணம்

பிடித்துச் சூடிக்கொண்ட பரமசிவனார்க்கும் ஞானாசிரியன் என்னும் மாண்பு தோன்றப் பதினாறு கலைகளும் முற்ற நிரம்பிய வெள்ளிய முழுத் திங்களையே முடியின்கண் சூட்டினாற்போன்று கலை கற்ற திங்கட்டேவன் கொற்ற வெண்குடை நிழற்றாநின்றான்.

(வி - ம்.) ஒற்றையங்கலை - அன்மொழி. இளம்பிறை என்க. பரன் - பரமசிவன். சோமன் - திங்கள்.

(187)

 எம்மை யீன்றவ னேயிவ னென்பபோற்
 செம்மல் பாலண வித்திரு மார்பனும்
 மும்மை வையக முந்தரு மூர்த்தியும்
 கைம்ம லர்க்கட் கவரிது ளக்கினார்.

(இ - ள்.) எம்மையீன்ற தந்தை யிவனே யாவன் என்று காட்டுவார் போன்று திருமாலும், மூன்றுலகங்களையும் படைத்தருளும் பிரமதேவனும் எம்பெருமானுடைய இருமருங்கு நின்று தமது கையாகிய மலரின்கட் கொண்ட சாமரையினை அசைத்தனர்.

(வி - ம்.) செம்மல் - முருகன். திருமார்பன் - திருமால்.

(188)

 வளியெ ழூஉங்கரு வித்திரண் மானுற
 வளியி னாட்டயர் வார்கொடி யெண்ணில
 வளித னக்கிறை யோடுகை வௌவினார்
 வளியின் வைப்பமர் வாழ்க்கையர் யாவரும்.

(இ - ள்.) காற்றுத் தேவன் உலகினில் வாழும் பேறு பெற்றோர் அனைவரும் அவ்வுலகிற் கிறைவனாகிய காற்றுத்தேவனோடு, காற்றிலே சுழலா நின்ற காற்றாடிக் கூட்டங்கள் போன்று காற்றிலே ஆடா நின்ற எண்ணற்ற நெடிய கொடிகளைக் கைப்பற்றி உயர்த்தனர்.

(வி - ம்.) வளியெழூஉங்கருவி என்றது காற்றாடியை. வௌவினார் -
பற்றினார்.

(189)

 ஆன நெய்பளி தத்தின விரொளி
 கான றும்புகை யுங்கன லோடவன்
 மாந கர்க்கணு ளார்கள்வ யக்கினார்
 மான நாகர்ம ணிவிளக் கேந்தினார்.

(இ - ள்.) ஆனின் நெய்யாலாகிய திருவிளக்குகளையும் கருப்பூர விளக்குகளையும் நறுமணப் புகையினையும் நெருப்புக் கடவுளும் அவன் பெரிய நகரத்து வாழுந்தேவரும் ஏந்தினர். பெரிய நாகலோகத்தினர் மணி விளக்குகளை ஏந்தா
நின்றனர்.

(வி - ம்.) ஆன - அ : ஆறனுருபு. ஒளி - விளக்கு. கனல் - நெருப்புக் கடவுள்.

(190)