பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1335

(இ - ள்.) சூரபதுமனோடு புரிந்த போரின்கண் களத்திடை இந்திர னோடு வீழ்ச்சியுற்றமைக்கு நாணி அச்சிறுமை தீர மிகப் பெரும் தவம் செய்து முற்றிவந்தெய்திய ஐராவதமென்னும் அக் களிற்றினைக் கைக்கொண்ட முருகப்பெருமானோ ? இவன் என்று சிலர் வினவா நின்றனர். அதுகேட்ட வேறுசிலர் அங்ஙனம் வினவியவர் திருவாயினை முத்தமிட்டு நன்று சொன்னீர் ! அழகிய ஒளிபடைத்த செவ்வரி பரந்த பெரிய கண்ணையுடையீர் ! நீயிர் கூறிய அம்முருகவேளே இவன் என்று பாராட்டினர்.

(வி - ம்.) ஞாட்பு - போர்க்களம். களிறு - ஐராவதம். முழுவி - முத்தங்கொண்டு. திருக்கோவையார் 227ஆஞ் செய்யுள் உரையில் இஃதிப் பொருட்டாதல் காணப்பட்டது.

(216)

 இருவர் கன்னிய ரிருந்தவ மாற்றின ரிவன்றோள்
 மருவி நின்றன ரென்மரான் மாதவம் புரியின்
 கருணை வள்ளலார் நம்மையுங் கடியயர் வார்கொல்
 உரைமி னென்றுதந் தோழிய ரொடுமுசாய்த் தொழுதார்.

(இ - ள்.) ஒருசில மகளிர், தேவசேனையும் வள்ளிநாயகியாருமாகிய இரண்டு கன்னியருமே உலகின்கண் இப்பெருமான் திருத்தோளை மணத்தற்குரிய பெரிய தவத்தை இயற்றியவர் ஆவர் என்று வியந்தாராக, அதுகேட்ட வேறுசிலர் தந்தோழிமாரை நோக்கி அன்புடையீர் ! யாமும் பெரிய தவத்தினைச் செய்தால் பேரருள் வள்ளலாராகிய இப் பெருமான் நம்மையும் மணந்து கொள்வாரோ ! கூறுமின் என்று வினாவி எம்பெருமானைத் தொழாநின்றனர்.

(வி - ம்.) இருவர் - தேவசேனையும் வள்ளியும். என்மர் - என்பர். ஆல் : அசை. கடி - திருமணம். உசாய் - வினவி.

(217)

 கள்ளம் வெள்விழிக் கின்மையுங் காமத்துக் காதல்
 உள்ள மின்மையு மொண்முலை யின்மையே காட்டும்
 பிள்ளை மைப்பெரும் பேதைமை தீர்பெதும் பையர்கால்
 தள்ள மென்புயத் தானைவீழ்ந் தோடிமுன் சார்ந்தார்.

(இ - ள்.) வெள்ளைமை சிறந்த விழியின்கண் கள்ளத்தன்மையில் லாமையையும் காமங்கலந்த காதல் தோன்றிய நெஞ்சமில்லாமையையும் ஒளியுடைய முலைகள் முகிழாமையே காட்டாநின்ற பிள்ளைமைத் தன்மையுடைய மிக்க பேதைமைப் பருவந்தீர்ந்த பெதும்பைப் பருவத்து மகளிர், தம்முள்ளத்தே பெருகிய காதல் உந்துதலானே மெல்லிய தோள்களையுடைய முருகப்பெருமானைப் பெரிதும் விரும்பி விரைந்தோடி அப்பெருமான் திருமுன்ன ரெய்தாநின்றனர்.

(வி - ம்.) காமத்துக் காதல் - காமமளாவிய அன்பு. புயத்தான் - முருகன். வீழ்ந்து - விரும்பி.

(218)

 வளருங் கொங்கையெவ் வளவையவ் வளவையின் மலர்க்கண்
 வளருங் கள்ளமு மனத்தகக் காதலு மருட்டத்