| (வி - ம்.) ஞெரேலெனத் தோன்றிய மெய்யுணர்ச்சி நிலையினின்றும் படிப்படியாக அம்மகளிர் உலகியல் நிலைக்கு வருதலை இச்செய்யுள் திறம்படக் கூறுகின்றமை யுணர்க. (224) | | கொற்ற வேலவன் வனப்பெனுங் குளிர்மழை பொழிய | | | வெற்ற காமவித் துளமெலாம் வேருற வூன்றி | | | முற்ற வாக்கையிற் பசலையாய்ப் படர்ந்துமூ துயரப் | | | பொற்ற போதுகொண் டலர்ந்தது பூவையர்க் கம்மா. |
(இ - ள்.) காமனுடைய முயற்சிக்குத் துணையாக, வெற்றியுடைய வேற்படையேந்திய முருகப் பெருமானுடைய பேரழகு என்னும் குளிர்ந்த மழை அம்மகளிருள்ளத்தே பொழிவதனாலே வெற்றியையுடைய காமமாகிய விதை அவர் நெஞ்சமெங்கும் வேரினை மிகவும் வீழ்த்தி அவருடலமெங்கும் பசலையாகப் படர்ந்து பழைய துன்பமாகிய பொன்னிற மலரெடுத்து மலரா நின்றது. (வி - ம்.) கொற்றம் - வெற்றி. வனப்பு - அழகு. மூ - பழைய. பொற்ற - பொன்னிறமுடைய. (225) | | பெண்ண வாயுருப் பசந்தனர் பேதைமா யவனும் | | | விண்ண மாளியும் பொற்கென விளங்கினான் வேதன் | | | தண்ணென் மாமதி விளர்த்தது விழிதுயில் சாரார் | | | எண்ணின் மாதரா ரென்படா ரிவனெழிற் கென்றார். |
(இ - ள்.) இப்பெருமானுடைய பேரெழில் கண்டு பேதைமைத் தன்மையுடைய திருமாலும் தேவேந்திரனும் தமது ஆண்மையை வெறுத்துப் பெண்மையுடையராதலைப் பெரிதும் விரும்பி நின்றனர். இனி அறிவு விளக்கமுடைய பிரமதேவன்றானும் பொலிவிழந்தனன். குளிர்ந்ததிங்கள் மண்டிலம் இவன் முகமண்டிலத்தின் அளியுடைமைக்கு நாணி வெளிறிற்று. மாதரார் இவனுடைய அழகைக் கண்டுழி என்னதான் படுவரோ ? மகளிரெல்லாம் கண்டுயில் கொள்ளாராயினர். (வி - ம்.) முருகன்றமக்கு மருகனாதலை மறந்து தாமும் பெண்ணாகி நுகர்தற்கு நினைதலின் பேதை மாயவனும் விண்ணமாளியும் என்றார். விண்ணமாளி - இந்திரன். (226) மடந்தை மகளிர் | | குண்ட லங்கதிர் விலங்கமென் றோளிடைக் குனிப்ப | | | வண்ட லம்புவார் குழல்சரிந் தொருபுற மலியத் | | | தண்ட ளிர்ச்சர ணூபுர மேகலை தழங்கப் | | | பெண்டி ராணவா மடந்தையர் பெயர்ந்துபோய் மிடைந்தார். |
(இ - ள்.) தம்மைக்கண்ட ஏனை மகளிர்தம் பெண்மையைவிடுத்து ஆண்மையை அவாவுதற்குக் காரணமான பெண்மைநலம் வாய்ந்தமடந்தைப் பருவத்து மகளிர் தமது குண்டலங்கள் தந்தோளிற்பட்டு ஒளி குறுக்கிட்டுப் பாயும்படி பிறழா நிற்பவும், வண்டுமுரலும் நெடிய கூந்தல் ஒரு புறமாகச் |