பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1343

படுகின்ற குளிர்ந்த முறுவலாகிய முல்லை மலரினையும் வெவ்விய கண்களாகிய பெரிய நீல மலரினையும் அம்புகளாகக் கொண்டு செயலற்று நின்றனர்.

(வி - ம்.) மாதர் - தேவமாதர். நகை - முறுவல். தறுகண் - வெங்கண். அண்ணல் - முருகப்பெருமான்.

(238)

 சிலைமதன் கணைக டூண்டச் செயப்படு பொருளாய் நின்றே
 கொலைபுரி யிறைவன் வாட்கட் குரூஉச்சுட ரிவன்கண் வாளி
 மலையுறழ் புயத்தி னெய்தே மலிபெருங் காமர் வெற்பின்
 உலையவின் றருளிற் றின்னாற் குறுவது போலு மென்றார்.

(இ - ள்.) அம்மகளிர் தாமே வில்லையுடைய காமன் அம்புகளை ஏவுதற்குச் செயப்படுபொருளாய் நின்றே அழித்தற்றொழிலையுடைய சிவபெருமானுடைய ஒலியுடைய நெற்றிக்கண்ணிற் றோன்றிய நிறமிக்க சுடராகிய இம் முருகப்பெருமான்பால் அவனுடைய மலையை யொத்த தோண்மிசைத் தமது கண்ணம்புகளை எய்து இளைத்து இம்முருகனுக்கு அழகுமிக்க இத்திருத்தணிகை மலையின்கண் இன்று யாம் வருந்தும்படி திருவருள் செய்தது இவனுக்குத் தகுதியாமோ என்று வருந்தா நின்றனர்.

(வி - ம்.) தன் மலையிடத்தே வந்த மகளிரை வருத்துதல் தனக்குத் தகுதியாமோ என்றவாறு. செயப்படுபொருள் - ஒருவன் ஒரு வினை செய்யுழித் தொழிற்படு பொருள். காமன் கணை ஏவுந் தொழிற்பயனை எய்தும்பொருள்
என்றவாறு.

(239)

 ஐயமேற் றுழலுந் தந்தைக் கருந்தவர்க் குரிய மாதர்
 வையமேற் கலையிட் டாரேன் மகன்மண வாள னாகி
 உய்யவீண் டுலாவுங் காலை யுடைவளை தோலார் யாரே
 நையுநூ லிடையா ரென்ன நலனொடு கலனுந் தோற்றார்.

(இ - ள்.) பிச்சையேற்றுத் திரிந்த இவன் தந்தையாகிய சிவபெருமானுக்கு அரிய தவத்தினர் மனைவியராகிய மகளிர்கள் நெஞ்சழிந்து பிச்சையாகத் தமது மேகலையணியை இட்டார் எனின், அவன் மகனாகிய இப்பெருமான் திருமணக் கோலத்தோடு உலகம் உய்தற்கு இங்கே திருவுலாப் போம்பொழுது இவனைக் காணும் மெலிந்த நூல்போன்ற இடையினையுடைய மகளிருள் வைத்து யாரே ஆடைகளையும் வளையலையும் இழவாதார் என்னும்படி அனைவரும் தம் பெண்மை நலத்தோடு அணிகலன்களையும் இழந்து நின்றனர்.

(வி - ம்.) ஐயம் - பிச்சை. மேகலை - அணிகலன் என்னும் பொருட்டாய் நின்றது.

(240)

 எலுவியங் கென்னை செய்தா யெலுவனும் பாங்க ருள்ளான்
 கலைநிறை தோற்றா யென்று கழறினோர் தாமு மூழான்
 நிலைதடு மாறு வார்போ னிறையொடு கலையுந் தோற்றங்
 கலைநெடுங் கொடியின் வாங்கி யணிவளர் தூசு சூழ்ந்தார்.