(இ - ள்.) சில மகளிர் "அந்தோ! எம்பெருமானாற்றழுவப்பட் டிலேமாயினும், அவனால் எம் முலையின் கண் குறி செய்யப்பட்டு விளங்கேமாயினும், பொருந்தி உடம்பு அவசமாதற்குக் காரணமான கரணங்களானே கலவிப்போர் புரிந்திலேமாயினும், அவனது விளங்கா நின்ற ஒளியுருவத்தைக் கண்ணாலே நோக்கி நெஞ்சத்தாலே உயிர் தளிர்ப்பத் தழுவிக் கொள்வேம் என்பதற்கும் முகபடாமுடைய இப்பாவிக் களிறு அவனைத்தன்னெருத்தின் மேற்கொண்டு செல்லா நிற்கும்; அதற்கு யாம் என் செய்வோம் என்று நெஞ்சம் நோவர். (வி - ம்.) வயக்குதல் - விளக்குதல். கரணம் - கலவித் தொழில் வகை. (244) | உருவெளி யருகு தோன்ற வுற்றன னிறைவ னென்னாப் | | பெருகிய காத லன்பிற் பிணையன்னார் தழுவிக் காணார் | | பொருவரு முத்தி யென்று புல்லிய கதியை நாடி | | மருவிய மதத்தர் போன்று மறுகிய வுளத்த ரானார். |
(இ - ள்.) காதலன்பு பெருகிய பிணைமான் போன்ற மகளிர் தம்மருகிலே எம்பெருமானுடைய உருவெளி தோன்றாநிற்ப அதனை எம்பெருமான் எமக்கிரங்கி எம்பாலணுகினன் என்று கருதித் தழுவி வறுங்கை யராய் அவ்வுருவெளியையும் காணப்பெறாராய் ஒப்பற்ற வீடுபேறென்று புன்மையான புறச்சமய முத்திநிலைகளைத் தேடிச்சென்ற புன்சமயத்தவரைப் போன்று வருந்திய நெஞ்சத்தையுடையராயினர். (வி - ம்.) உருவெளி - ஒரு பொய்த்தோற்றம், கதி - முத்தி (245) | எங்கணு முடிகள் கண்க ளெங்கணும் வதனம் வாய்கள் | | எங்கணுஞ் செவிக ணாசி யெங்கணுந் தோள்க டாள்கள் | | எங்கணு முருவ மின்னாற் கெனமறை யியம்பி யாங்கே | | எங்கணுங் கண்டா மன்றற் கெய்திய தவத்தா னென்றார். |
(இ - ள்.) சிலமகளிர் தங்காதன் மிகுதியானே எம்பெருமானுடைய திருவுறுப்புக்களை விழிக்குமிடமெல்லாங்கண்டு ஆ! ஆ! இவன் உருவம் யாண்டுமுளது என்று மறைகள் கூறுவதுபோன்றே யாண்டு நோக்கினும் இவனுடைய திருமுடிகளே காணப்படுகின்றன. யாண்டும் இவன் திருவிழிகள் காணப்படுகின்றன, யாண்டும் இவன் திருமுகங்கள் காணப்படுகின்றன; இங்ஙனமே இவனுடைய திருவாய்கள், திருச்செவிகள், நாசிகள் திருத்தோள்கள், திருவடிகள் ஆகிய அனைத்துறுப்பும் நோக்குமிடந்தோறும் காணப்படுகின்றன. இம்மெய்க் காட்சி நமக்கு இத்திருமணத்திற்கு வந்த தவப்பயனாலாயது போலும் என்று வியந்தனர். (வி - ம்.) எங்கணும் - எவ்விடத்தும். மன்றல் - மணம். (246) | அடிகளா ருருவங் காட்டி யலங்கிய தெனுமார் வத்தால் | | கடிதழல் சுடுவ தெண்ணார் கதுமெனத் தழுவி மோந்தார் |
|