| பொறுப்பது வலித்துமேனும் பொழிமழைத் தாரை கொண்டீர் | | கறுப்பொடு வெளிறி னீரோ காரிய முடிப்பீ ரென்றார். |
(இ - ள்.) உறுப்பினுட் சிறந்தன என்று உலகோர் பாராட்டும் கண்களே நீயிர் அங்ஙனம் பாராட்டுதற்குரியீரல்லீர் ! வாய்மையாகவே நீயிர் குற்றமும் பேதைமையும் உடையீராவீர், எமக்கு முருகப் பெருமானை நீயிரே காட்டித் தந்தீர். அச்செயலானே எமதுளத்தை வருத்தாநின்றீர். இக்குற்றத்தை யாம் பொறுத்துக் கொள்ளக் கருதினோம் ஆயினும் ஓ ! நுமக்கியல்பான அத்தொழிலை முற்றுறச் செய்தற்கு நீவிர் மீண்டும் மீண்டும் நோக்கிப் பொழியா நின்ற மழைபோன்று நீருகுக்கவும் உகுக்கின்றீர். நன்று - நன்று என்பாராயினர். (வி - ம்.) வலித்தும் - கருதுகின்றோம். கறுப்பு - கருமை ; குற்றம். வெளிறு - வெண்மை ; பேதைமை. (250) | நுந்தைபோ னுனது மார்புங் குறியுள தாமே னோக்கும் | | பைந்தொடி யெங்கள் வாட்கண் பார்த்தற்கு மிசையாய் போலும் | | அந்தர ரிடும்பை யோம்பி யருளினை யலக்க ணோப்பி | | எந்தரத் தருளல் போலு மியைவுறா திறைவற் கென்றார். |
(இ - ள்.) சிலமகளிர் எம்பெருமானே நீயும் நினது தந்தை போன்று மார்பின்கண் முலைத்தழும்பு பெற்றதுபோல் நின் மார்புங் குறியுளதாமோ ? கண்ணைப் பார்த்தற்கும் திருவுளமிரங்கினாயல்லை. தேவர்களின் துன்பத்தையகற்றி அருள்கூர்ந்தனையல்லையோ ? அத்தகையோய் ஏழையேம் திறத்தில் அருளமாட்டாயோ, நினது செயல் கடவுட்கியையாத தொன்றாயிருந்தது என்று பழிக்கலானார். (வி - ம்.) குறி - காஞ்சியம்பதிக்கண் அம்மையார் தழுவ நேர்ந்த முலைச்சுவடு. வலியோர்க்குதவி எளியோரைப் புறக்கணித்தல் தெய்வத்திற் கியையாது என்பதாம். (251) | திருவுரு வனப்பை வௌவுஞ் செங்கயல் விழியு முள்ளும் | | தெருளுறு முயிரும் பேராச் சிறையகத் தாக்கிக் கூப்பும் | | இருகையும் வணக்கங் கொண்ட விடையும்வண் சிறையி னீங்க | | அருளினை புரவு ளாய்க்கிவ் வடுப்பன வழகோ வென்றார். |
(இ - ள்.) சிலமகளிர் எம்பெருமானே ! நின் அழகிய உருவத்தின் எழிலைக் கவராநின்ற செவ்விய கயல்போன்ற எம் விழிகளையும், நினைக்கின்ற எம் நெஞ்சத்தினையும் ஆருயிரையும் மீளாத சிறைக் கூடத்தேயிட்டு, நின்னைக் கூப்பித் தொழுத எம்மிருகைகளையும் வணக்கஞ் செய்த எம்மிடையினையும் வளவிய சிறையினின்றும் விடுதலையுறச் செய்தனையே; இம்மாறுபாடுடைய செயல்கள் காவற்றொழிலைமேற் கொண்ட நினக்குத் தகுதியோ அழகுதானோ ? என்று வினவினர். (வி - ம்.) வனப்பு - அழகு. உள் - ஈண்டு நெஞ்சம். கையைச் சிறை நீக்குதல் - வளை கழல்வித்தல் ; இடையைச் சிறை நீக்குதல் - ஆடை நெகிழ்வித்தல் என்க. (252) |