| பெண்ணெனப் பட்டு நின்றார் பெருமதர் மழைக்க ணோடிக் | | கண்ணென வளைத்து நல்கக் கடவுளர்க் கிறைவன் றன்னை | | உண்ணமிழ் தென்னத் துய்த்தா ரோரிரு மகளி ரேயாம் | | பெண்ணழி பதடி யானாம் பேருல கத்தி லென்றார். |
(இ - ள்.) சிலமகளிர் இப்பேருலகத்தின்கண் பெண்டிர் எனப் பிறந்தோருள் வைத்து இரண்டு மகளிர் மட்டுமே தமது பெரிய மதர்த்த குளிர்ந்த நோக்கங்கள் பாய்ந்து விரைந்து எம்பெருமானை வளைத்துக் கொணர்ந்து தருதலானே தேவ தேவனாகிய அப்பெருமானை உண்ணும் அமிழ்தம் போன்று நுகர்ந்தனர். யாமோ பெண்குலத்தில் மிக்க பதர்களேயா யினம் என்று வருந்தா நின்றனர். (வி - ம்.) கண்ணென - விரைய; குறிப்புமொழி. "பொய்ந்நில மருங்கிற் போத்தந்தென்வயிற் கண்ணெனத் தருதல் கடன்" என வரும் பெருங்கதையில் (2. 9 : 234 - 5) அஃதப் பொருட்டாதலறிக. ஓரிரு மகளிர் - இரண்டு மகளிர்; என்றது வள்ளி, தேவசேனை ஆகிய இருவரையும். பதடி - பதர். (253) | பல்வகைச் சிறப்புங் கொண்டு பாவையர் மனமுங் கொண்டு | | வில்வளர் வீதிதோறும் விழாவணி விஞ்சப் போந்திட் | | டெல்வளர் மணிப்பொற் காந்தி யிமைப்புறா ரிமைக்குங் கோயில் | | சொல்வளர் சாமி நாதன் றும்பிநின் றிழிந்து புக்கான். |
(இ - ள்.) இவ்வாறு புகழ்வளர்தற்குக் காரணமான முருகப்பெருமான் பல்வேறு வகைச் சிறப்புகளையும் மேற்கொண்டு மகளிர் நெஞ்சங்களையுங் கொள்ளைகொண்டு ஒளிவளரா நின்ற வீதிதோறும் திருவுலா விழா அழகு மிகும்படி எழுந்தருளி ஒளிவளரா நின்ற மணிகளினுடைய ஒளியினாலும் பொன்னொளியினாலும் கண்ணிமையாத தேவரும் கண்ணிமைத்தற்குக் காரணமான திருக்கோயிலின்கண் களிற்றினின்றும் இறங்கிப் புகுந்தருளினான். (வி - ம்.) வில் - ஒளி. விஞ்ச - மிக. எல் - ஒளி. இமைப்புறார் - தேவர். சொல் - புகழ். தும்பி - யானை. (254) | நித்திலத் தாம நான்ற நிழன்மணி விதான வேதிப் | | பைத்தபொன் னணையின் மேலாற் பாவையோ டிருந்தெல்லோரும் | | மெத்திய வரிசை பெற்று வீற்றுவீற் றாங்காங் கெய்தி | | ஒத்தவா றிருப்ப வேவி யுற்றனன் படுக்கைச் சூழல். |
(இ - ள்.) முத்து மாலைகள் தொங்கவிடப்பட்ட ஒளிமணிப்பந் தரையுடைய மேடைமிசை பசிய பொன்னாலாய இருக்கையின்கண் வள்ளிநாயகியாரோடு வீற்றிருந்தருளி இந்திரன் முதலிய அனைவரானும் அளிக்கப்பட்ட மிக்க வரிசைப் பொருள்களை வெவ்வேறாக அவ்வப் பொழுதிற் பெற்று அவரை எல்லாம் அவரவர் தகுதிக்கேற்ற இடங்களிலே சென்றிருக்கப் பணித்தபின்னர், பள்ளியறைக் கெழுந்தருளினன். |