பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1349

(வி - ம்.) வேதி - பீடம். பாவை - வள்ளி. வீற்றுவீற்று - வேறு வேறு.

(255)

 சாந்துபெய் செப்பும் பூந்தார்த் தமனியச் செப்பும் வாசம்
 ஏந்திய செப்பும் வெவ்வே றிருத்திய வணியின் செப்பும்
 காந்திகொ ளாடி மற்றுங் கஞற்றினர் நாப்ப ணிட்ட
 தேந்தவழ் சயனத் தேறித் தேவியோ டிருந்தா னன்றே.

(இ - ள்.) சாந்திட்ட செப்பும் பொலிவுடைய மலர்மாலை வைத்த பொற்செப்பும் பொலிவுடைய முகவாசமிட்டசெப்பும் வெவ்வேறாக வைக்கப்பட்ட அணிகலச் செப்புகளும் ஒளியுடைய கண்ணாடியும் பிறவுமாகிய இவற்றை ஏந்திய பணிமகளிரின் நடுவே இனிமை மிகா நின்ற மலர்ப்பள்ளியின்கண் ஏறி வள்ளிநாயகியாரோடு இனிதே வீற்றிருந்தருளினன்.

(வி - ம்.) தமனியம் - பொன். அணி - அணிகலன். காந்தி - ஒளி. கஞற்றிளர் - ஏந்தியவர். பணிமகளிர்.

(256)

 விதித்தருண் மறையி னீதி மேதினி வழக்க மாக
 மதித்தனன் சோம னாகி வனமுலை திளைத்தான் பின்னாள்
 கதிர்த்தகந் தருவ னாகிக் கலந்தனன் மூன்றா நாளில்
 கொதித்தெழு மங்கி யாகிக் குமரவேள் கூடி னானால்.

(இ - ள்.) இறைவனால் விதிக்கப்பட்ட வேதநீதி உலகில் வழங்கும் வழக்கமாகும் பொருட்டு குமரப்பெருமான் முதனாள் திங்கட்டேவனாகி வள்ளிநாயகியாரைக் கூடினன். இரண்டாநாள் ஒளிமிக்க கந்தருவனாகிக் கூடினன். மூன்றா நாளில் கொதித்தெழா நின்ற தீக்கடவுளாகிக் கூடியருளினான்.

(வி - ம்.) மகளிரை மருவுவோர் மூன்று நாட்கள் விரதமிருந்து நாலாநாள் கூடுதல் வேண்டும் என்பது வேதவிதி. முதனாள் திங்களும் இரண்டாநாள் கந்தருவனும் மூன்றாநாட் தீக்கடவுளும் அப்பெண்ணைக் கூடுவராகலான் என்பது கருத்து ; எல்லாந்தானேயாகிய இறைவனும் அவ்விதி பிறழாமல் அவ்வத்தேவராய் மருவினன் என்றவாறு.

(257)

 வழிவரு நாலா நாளின் மஞ்சன விழாக்கொண் டாடிக்
 கழியிடை யிரண்டு நாளுங் காலையு மாலைப் போதும்
 செழிமறை மனுவி னோம்புந் தீயிடைக் குறைகண் முற்றிப்
 பொழிகதிர் விதான வேதிப் பூவணைத் தவிசி னுற்றான்.

(இ - ள்.) அம்மூன்று நாட்களின் பின்னே வருகின்ற நாலாநாள் திருமஞ்சன விழாக் கொண்டாடி மேலே செல்லாநின்ற ஐந்தாம் ஆறாம் நாளிரண்டினும் காலைப் பொழுதினும் மாலைப் பொழுதினும் செழித்த வேத மந்திரங் கணிக்கின்ற வேள்வித் தீயினாலே (முன்பு களவுப்பொழுதில் நிகழ்ந்த) குற்றங்கள் போக்கி ஒளிவீசா நின்றதொரு பந்தரின்கண் மலரணையிருக்கையிலெழுந்தருளினன்.